ஆத்திரத்தில் மகன் மீது துப்பாக்கிப் பிரயோகம் : தந்தை கைது
இளம் வயது புதல்வன் மீது ஆத்திரத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரொருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம்(18.10.2025) இரவு தந்தையும் மகனும் இடையே ஏற்பட்ட சண்டைக்குப் பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட தந்தை
தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, அவர் தனது மகனை ஏர் ரைபிள் எனப்படும் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் ஆனமடுவ, ஆண்டிகம, கடயந்தலுவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம்(18) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 வயதுடைய இளைஞன், ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட தந்தையைக் கைது செய்துள்ள ஆனமடுவ பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




