நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு! பொலிஸார் விசாரணை
நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த (10.04.2026) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இடிதாங்கி திருட்டு
அதன்படி நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து இன்று (22) சிறப்பு விசாரணைகளுக்கு நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகை தந்தனர்.

நுவரெலியாவில் பழமையான இந்தக் கட்டிடத்தில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அறிவியல் கருவியாக காணப்பட்டது.
இது கட்டிடத்தை விட உயரமாக காணப்பட்ட கடிகார கோபுரத்தில் பொருத்தப்பட்டு, மின்னலின் அதிகப்படியான மின்சாரத்தை ஈர்த்து, பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தும் இவ் கருவியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில் உள்ள இடிதாங்கி திருடப்பட்டதால் நுவரெலியாவில் காணப்படும் மோசமான காலநிலையின் போது நுவரெலியா வாழ் மக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இடிதாங்கி கருவிகளில் பயன்படுத்தப்படும் செம்பு (Copper) போன்ற உலோகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இவை சமூக விரோதிகளால் குறிவைக்கப்படுகின்றன எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.


