அமெரிக்காவை புரட்டிப்போட்ட வரலாற்றில் மிகவும் மோசமான சூழற் சூறாவளி! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் 80ற்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுகொண்ட சூழற் சூறாவளியில் சிக்கி உயிர்பிழைத்தவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கென்டக்கி, மிசோரி, டென்னசி மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 30 ற்கும் மேற்பட்ட சூழற் சூறாவளி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூழற் சூறாவளி காரணமாக கென்டக்கி மாநிலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தை பேரழிவு ஏற்பட்ட இடமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரகடனம் செய்துள்ளார்.
கென்டக்கி மாநிலத்தின் மேஃபீல்ட் நகரில் உள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலைக்குள் இருந்த பலர் சூழற் சூறாவளியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைக்குள் 110 பேர் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார்கள் எனவும் அவர்களில் 40 பேர் வரை மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் மாநில ஆளுநர் அன்டி பெஷியர் கூறியுள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில், காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் ஆயின் அது அதிசயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான சூழற் சூறாவளி தாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டலாம் எனவும் எச்சரித்துள்ளார். கென்டக்கியில் மாநில ஆளுநர் அன்டி பெஷியர், அவசர நிலைமையை பிரகடனம் செய்துள்ளார்.
மாநிலத்தை இதுவரை தாக்கிய சுழற் சூறாவளிகளில் மிகவும் கொடூரமான ஒன்றாக இந்த சூழற் சூறாவளி அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேஃபீல்ட் மற்றும் ஏறத்தாழ 365 கிலோமீற்றர் தூரத்திற்கு சூழற் சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், கென்டக்கி மாநிலத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் பாரிய அழிவை சந்தித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார்.
மேஃபீல்ட் பகுதியில் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து செயற்பட்டுவரும் காங்கிரஸ் உறுப்பினரான ஜேம்ஸ் கமர், வாழ்நாளில் இதுபோன்ற சூழற் சூறாவளியை கண்டிருக்கவில்லை என கூறியுள்ளார்.