பிரபல ஜோதிடரிடம் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட மனைவி
நாட்டு மக்களுக்கே ஜோதிடம் சொல்லும் பிரபல ஜோதிடர் ஒருவரிடமிருந்து அவரது மனைவி கோடிக்காணக்கான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவானிடம் முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
47 பவுண் எடையுடைய தங்கம் மற்றும் 140 லட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பனவற்றை குறித்த பெண் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயதான பிள்ளைகளையும் தமது மனைவி அழைத்துச் சென்றுள்ளதாக ஜோதிடர் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், கணவரின் சொத்துக்களை எடுத்துச் செல்லவும் பிள்ளைகளை அழைத்துச் செல்லவும் மனைவிக்கு உரிமை உண்டு என நீதவான் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த பெண்ணின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஜோதிடர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.



