இந்தியாவின் ஜெனிவா உரைக்குள் புதைந்திருக்கும் எச்சரிக்கை இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்!
காட்டமான விடயங்களையும் - நளினமான, மென்மையான சொல்லாடலில் - கைலாகு கொடுத்து சிரித்துக் கொண்டே கூறுவதுதான் இராஜதந்திர மொழி. இராஜதந்திர ஊடாட்டங்களில் - இராஜதந்திரிகளின் பேச்சுக்களில் - கோபமான, கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்காது, உடல்மொழி கருத்துச் சீற்றத்தைக் காட்டாது.
ஆனால் மென்மையான வார்த்தைகளில் ஆழமான கோபம் தோன்றாமல் தோற்றும். சுருக்கமாச் சொல்வதானால், மற்ற நாடு மீது போர்ப்பிரகடனம் செய்யும் முடிவைக் கூட அந்த நாட்டு இராஜதந்திரியிடம், இந்த நாட்டு இராஜதந்திரி புன்முறுவல் பூத்தபடி, கைலாகு கொடுத்து, குசலம் விசாரித்து கொண்டு கூறுவதுதான் இராஜதந்திர அணிகலன்.
அப்படி ஒரு வேலையை இலங்கை விடயத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றது இந்தியா. வெளிப்பார்வைக்குத் தோற்றாவிட்டாலும், சத்தம் சந்தடியின்றி அப்படி ஒரு வேலையைச் செய்திருக்கின்றது இந்தியா.
இந்திரா காலத்தில், ஜே.ஆர். ஆட்சிப் பீடம் மீது புதுடில்லி தொடுத்த இராஜதந்திரப் போரை ஒத்தது இப்போது மோடி அரசு பண்ணியிருக்கின்ற காரியம். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் முன்வைத்துள்ள பிரேரணையை ஆதரித்தும் எதிர்த்தும் இன்று பல நாடுகளும் கருத்து வெளியிட்டன.
பல தரப்புகளினதும் கருத்து வெளிப்பாட்டை நோக்கும்போது அவை ஒவ்வொன்றும் இந்தப் பிரேரணையை ஆதரிக்கப் போகின்றனவா அல்லது எதிர்க்கப் போகின்றனவா என்பதை எடை போடக் கூடியதாக இருந்தது.
ஆனால், வழமைபோல இன்று இந்தியத் தரப்பு வெளியிட்ட ஒன்றரை நிமிட கருத்துரையை நோக்கினால், அது பிரேரணையை ஆதரிக்கின்றதா அல்லது எதிர்க்கின்றதா என்ற மயக்க நிலையே அதில் தொக்கி நின்றது.
வழமைபோல இந்தியா இந்தப் பக்கமும் இல்லாமல், அந்தப் பக்கமும் இல்லாமல் மதில்மேல் பூனை நிலைப்பாட்டையே பேணுகின்றது என்ற அவதானிப்பையே அந்தக் கருத்துரை பிரதிபலித்து நின்றது. அதனால், பிரேரணையை சமர்ப்பித்த நாடுகளுக்கும் அதை ஆதரித்தும், எதிர்த்தும் நிற்கின்ற தரப்புகளுக்கும் தெளிவான - திட்டவட்டமான - உறுதியான - ஒரு நிலைப்பாட்டையோ, செய்தியையோ, இந்தியா வெளிப்படுத்தவில்லை என்ற குறை நீடிக்கவே செய்கின்றது.
ஆனால், பிணக்கில் சம்பந்தப்பட்ட இலங்கைக்கு காட்டமான - காத்திரமான - ஆழமான - முன்னெச்சரிக்கை ஒன்றை அது மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும், உறுதியாகவும், சந்தேகத்துக்கு அப்பாலும், ஐயந்திரிபறவும் இந்தியா தெரிவித்திருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.
இலங்கைக்குப் பேரதிர்ச்சியைத் தரும் அந்த இராஜதந்திரச் செய்தி, வழமையான இராஜதந்திர முறைமைகளுக்கு அமைவாக, மென்மையான இராஜதந்திர சொல்லாடல்களில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை தொடர்பான இந்தியாவின் ஊடாட்டம் இரண்டு தூண்களில்தான் தங்கியிருக்கின்றது என்கிறது பாரதம். ஒன்று - இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்குமான இந்தியாவின் ஆதரவு. மற்றையது - சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கெளரவத்துடன் வாழ்வதற்கான தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் அர்ப்பணிப்பு. - இவ்வாறு வலியுறுத்திய இந்தியப் பிரதிநிதி ""இவை ஒன்று அல்லது மாற்றுத் தெரிவுகள் அல்ல, ஒன்றில் மற்றொன்று தங்கியிருப்பது'' - என்ற சாரப்படவும் கருத்துரைத்திருக்கின்றார். இதுவே, இலங்கைக்கு விடப்பட்ட இராஜதந்திர எச்சரிக்கை. இரண்டு தூண்களில் தாங்கி நிற்கும் இந்திய - இலங்கை உறவில் ஒரு தூண் தகர்ந்தால் மற்றதில் உறவு தொங்கிக் கொண்டு நிற்காது வீழ்ந்து விடும். அது மாத்திரமல்ல, இவை இரண்டும் மாற்றுத் தெரிவுகள் அல்ல, ஒன்றில் மற்றொன்று தங்கி நிற்பது என்ற இராஜதந்திர சொல்லாடல் மூலம் இந்தியா இலங்கைக்கு கூற வருவது என்ன? ஒன்று இல்லாவிட்டால் மற்றையதும் இல்லை என்பதுதான் அதன் முழு அர்த்தம்.
தமிழர்களின் நீதி, நேர்மையான அபிலாஷைகள் - அதாவது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிகாரப் பகிர்வு உட்பட்ட விடயங்கள் - செம்மைப்படுத்தப்பட்டால்தான் - இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் தனித்துவ இறைமைக்குமான இந்தியாவின் ஆதரவு நீடிக்கும் என்பதே அதன் பொருள். தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கொழும்பு தவறினால் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமைக்கு இந்தியாவின் ஆதரவு கேள்விக்குள்ளாகும் என்பதே விளக்கம்.
ஜெயவர்த்தனா காலத்தில் தமிழர்களின் போராளிகள் இயக்கங்களுக்கு இந்திரா காந்தி அரசு மறைமுகமாக முகாம்களை அமைத்து, பயற்சி கொடுத்து, இலங்கை அரசின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இறைமையையும் கேள்விக்குள்ளாக்கிய அனுபவம் - பட்டறிவு - கொழும்புக்குத் தாராளமாக உண்டு.
ஆகவே, புதுடில்லியின் ஜெனிவாச் செய்திக்குள் புதைந்துகிடக்கும் ஆழமான எச்சரிக்கை கொழும்பின் மூளைமையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பது நிச்சயம்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
