நாடாளுமன்றத்தின் மூன்று தலை கழுதைகள் தொடர்பில் சபையில் வெளியிடப்பட்ட தகவல்
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நபர்களை மூன்று தலை கழுதைகள் என கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா கூறியதாக அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்ற நேரத்தை ஒதுக்குவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் உரையாற்றும் உரிமை உள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. சுயாதீனம் என்ற ஒன்று இல்லை.
மூன்று தலை சம்பிரதாயம் நடைமுறைக்கு வரும்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டிலும் இல்லாதவர்கள் இருப்பார்கள் எனில் நடுவில் ஆசனங்களை ஒதுக்கி சுயாதீனம் என்று கூற வேண்டும். அப்படி நடந்தால், வெஸ்ட் மினிஸ்ட முறை ஒழிந்து மூன்று தலை சம்பிராதாயம் நடைமுறைக்கு வரும்.
சுயாதீனமாக செயற்படுபவர்களை மூன்று தலை கழுதைகள் என கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வா கூறினார். நாங்கள் அப்படி சொல்ல விரும்பவில்லை. சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றும் உரிமை உள்ளது.
சுயாதீனமாக செயற்படும் போது நேரத்தை ஒதுக்குவது ஆளும் கட்சியா,எதிர்க்கட்சியா?. எங்களது நேரத்தை தருகிறோம். எதிர்க்கட்சி தருமா? என பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தெரிவான அணி மூலமே நேரத்தை ஒதுக்க வேண்டும்
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய நாடாளுமன்றத்திற்கு தெரிவான அணியே நேரத்தை ஒதுக்கும். எதிர்க்கட்சி வரிசைக்கு வந்து அமர்ந்தவர்கள் பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள். அதனடிப்படையிலேயே நேரத்தை ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.