சேர் டேவிட் அமேஸின் படுகொலை! தாக்குதலுக்கு முன்னர் லண்டன் தெருவில் நடந்துவந்த சந்தேகநபர்
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் வடக்கு லண்டன் வீதியில் அலி ஹர்பி அலி நடந்துவரும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் இது குறித்த காணொளியை வெளியிட்டுள்ளன.
சேர். டேவிட் அமேஸி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதான அலி ஹர்பி அலி என்ற நபர் வெள்ளிக்கிழமை காலை நடைபாதையில் மெதுவாக நடந்து சென்றுள்ளார்.
சந்தேகநபர் வலது தோள்பட்டையில் பையுடனும், பச்சை நிற பார்கா ஆடை மற்றும் கண்ணாடி அணிந்திருப்பதையும் காணமுடிகின்றது. இந்த காணொளி காட்சிகள் காலை 8.44 மணிக்கு ஹைகேட் சாலையில் உள்ள ஒரு கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு சில மணிநேரங்களில் அலி ஹர்பி அலியின் நடமாட்டத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர், இந்நிலையிலேயே தற்போது குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸ் (69), எஸ்செக்ஸ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் லண்டனில் வசிக்கும் 25 வயதான Ali Harbi Ali என்ற இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் (Harbi Ali Kullane)வின் மகன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேர். டேவிட் அமேஸி எம்.பியை கொலை செய்ய சந்தேகநபர் ஒரு வாரத்திற்கு மேலாக திட்டமிட்டு வந்ததும், லண்டனில் வசித்து வரும் இவர் தனியாளாக ரயில் மூலம் வருகை தந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சேர். டேவிட் அமேஸி குத்தி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டு எம்.பி.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.