இராணுவத்தினரின் செயலால் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்(Photos)
முல்லைத்தீவு - பெருங்கடலிலிருந்து தீர்த்தமெடுக்க சென்ற அடியவர்களை முகாம் அமைத்து தடுத்து நிறுத்தியதாக இராணுவத்தினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று(4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு - பெருங்கடலை நோக்கி அடியவர்கள் சென்றுள்ளனர்.
ஆலயத்திற்கு தீர்த்தம் எடுப்பதற்கு செல்கின்ற வீதியை இராணுவத்தினர் மறித்து பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.
வீதியை மறித்து முகாம்
இதுவரை காலமும் தீர்த்தமெடுப்பதற்கு அனுமதி வழங்கிய இராணுவத்தினர் இம்முறை தீர்த்தம் எடுப்பதை தடை செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு கோவிட் காலப்பகுதியில் இராணுவத்தினர் இந்த வீதியூடாக செல்லவிடாத நிலையில் மாற்று வீதி ஒன்றின் ஊடாக சென்று கடற்கரையில் தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் வழமைக்கு மாறான செயற்பாடு காரணமாக அந்த பகுதியில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இம்முறை அந்த வீதியூடாகவே செல்ல வேண்டும் எனவும் தங்களுடைய சம்பிரதாயத்தை மாற்ற முடியாது எனவும் தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராணுவ முகாமுடன் ஆலய நிர்வாகத்தினர் கலந்துரையாடியதோடு மூன்று நாட்களுக்கு முன்பாக எழுத்து மூலமாக ஆவணம் ஒன்றையும் வழங்கி உள்ளனர்.
இருப்பினும் இராணுவத்தின் உயர் பீடங்கள் இந்த பாதையால் சென்று தீர்த்தம் எடுப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்து இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை இராணுவ முகாம் வாயிலில் வீதிக்கு குறுக்காக தடையை ஏற்படுத்தி உள்ளே செல்ல விடாது தடுத்திருந்தனர்.
இதன்போது அங்கு சென்றவர்கள் பல்வேறு வகையிலும் அவர்களிடம் கோரிய போதும் அவர்கள் எந்த விதத்திலும் அனுமதிக்காத நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த விதிமுறைகளை மாற்றி ஏற்பட்ட விபரீதங்கள் காரணமாக இம்முறை அவ்வாறு செல்ல முடியாது என பல மணிநேரமாக கூறியபோதும் ஒன்பது முப்பது மணி வரை அவர்கள் அதற்கு சம்மதித்திருக்கவில்லை.
இதனால் மாற்று பாதை ஒன்றினூடாக தீர்த்தமெடுக்கும் அணியினர் பெருங்கடலுக்கு சென்றுள்ளனர்.
பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
அதேவேளையில் அந்த இடத்தில் ஒன்றுகூடி இருந்த ஏனைய மக்கள் முல்லைதீவு பரந்தன் பிரதான வீதியில் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதி தடையை ஏற்படுத்தியிருந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதனையடுத்து இராணுவத்தினரை ஆலய கடமைகளுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் ஆலய காணியில் இருந்து வெளியேறுமாறு மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் வீதியில் இறங்கி போராட முற்பட்ட வேளையிலே சுமார் 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆயுதம் தாங்கிய நிலையில் அந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டதுடன் குறிப்பிட்ட இடத்தில் சில மணிநேரம் பதற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
தங்களுடைய ஆலய கடமைக்கு ஒத்துழைக்காத இராணுவம் ஆலய காணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த மக்களினுடைய காணியிலிருந்து இராணுவத்தினர் தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவதாக உறுதி அளித்து இரவோடு இரவாக சென்றுள்ளனர்.
ஆலயத்திற்கு சொந்தமான இடமானது இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட உடன் மக்கள் அந்த இடத்தினை எல்லைப்படுத்தி வேலியடைத்துள்ள நிலையில் அதற்கு சப்த கன்னிமார் ஆலயத்துக்குரிய காணி என பெயர் பலகை ஒன்றையும் நாட்டியுள்ளனர்.
இதேவேளை தீர்த்தமெடுக்க செல்கின்ற வீதி இராணுவத்தினர் தங்களுடைய இராணுவ முகாம் வீதியென பெயரிட்டிருப்பதனால் அந்த பெயரை மாற்றுவதற்கும் முற்பட்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
