நிந்தவூரில் இரண்டு கடைகள் தீப்பிடித்து முற்றாக சேதம்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர்-9 ம் பிரிவு மூன்றாம் குறுக்குத் தெருவில் அல் மினா பாடசாலைக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள இரண்டு கடைகள் தீப்பிடித்து இன்று முற்றாக எரிந்துள்ளது.
இதன்போது ஹார்ட்வேர் (இரும்பு கடை) மற்றும் பலகை கடை ஆகியனவே தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஹார்ட்வயார் கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் இப்பகுதியில் மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தீ அனர்த்தம் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றதும், துரிதமாகச் செயற்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ. எம் தாஹிர் கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு படையினரை அவசரமாக துரிதகதியில் ஸ்தலத்திற்கு வரவழைத்து தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .
இதேவேளை ,குறித்த கடையினுள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளமையால் அவைகள் வெடித்து சிதறலாம் என்ற அச்ச நிலைமை இருந்தபோதும் பாரிய சேதங்கள் எதுவுமின்றி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
இது தொடர்பாக ஸ்தலத்தில் இருந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ .எம் தாஹிர் , அனர்த்தத்தை மிகத் துரிதமாக செயல்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒத்துழைத்த கல்முனை மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.







