ஈழத்தமிழர் போராட்டமும் இலங்கைத் தீவில் ஏற்பட்ட புரட்சிகர விளைவுகளும்
"ஒரு செயல் தரவல்ல விளைவுகளில் இருந்துதான் அச்செயல் பற்றி எடை போட வேண்டும்" இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம், ஜனநாயகம், மனித உரிமைகள், சமத்துவம், சாதி, மத ஒடுக்கு முறைகள் என்பவற்றில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அதற்கான அடித்தளங்களை இட்டு இருக்கிறது. அவற்றின் தேவையை உணர்த்தி இருக்கிறது. புரட்சிகர மாற்றங்களுக்கு வழி சமைத்திருக்கின்றது.
அவ்வாறே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் தம்மை ஒரு சக்தியாகத் திரட்சிபெறச் செய்வது இலங்கைத்தீவின் அனைத்து மக்களினதும் விமோசனத்திற்கும் வழிசமைக்கும்.
பிரஞ்சுப் புரட்சி உலகம் தழுவிய மனிதகுல முன்னேற்றத்திற்கான அச்சாணியாக, அடித்தளமாக, பெரும் உந்து சக்தியாக விளங்கியது.
பிரஞ்சுப் புரட்சி உலகம் தழுவிய மானிட விமோசனத்திற்கு வழி சமைத்தது போல ஈழப் போராட்டம் இலங்கை தீவுக்குள் மனித உரிமை வளர்ச்சிக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், சர்வதேச பரிமாணங்களை பெறுவதற்குமான அனைத்து வகை உந்து சக்தியாகவும், இலங்கைத் தீவின் ஜனநாயக மீட்புக்கான அச்சாணியாகவும் அனைத்து இனங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கும், நிலைநாட்டுவதற்குமான சக்தியாகவும் விளங்கியிருக்கிறது.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள்
எனவே, ஈழப் போராட்டத்தினால் விளைந்த விளைவுகள் பற்றி சாதக, பாதக ஆய்வு இன்றைய நிலையில் தேவையாக உள்ளது. ஈழப் போராட்டம் பற்றி பல்வேறு தரப்புக்கள் பல்வேறுபட்ட பாதகமான விமர்சனங்களை முன்வைக்கலாம்.
அந்த விமர்சனங்களுக்கு அப்பால் ஈழப் போராட்டத்தின் விளைவுகளால் சிங்கள சமூகத்திலும், இஸ்லாமிய சமூகத்திலும், தமிழ் சமூகத்திலும், அரசியல், பொருளியல் சமூகவியல் மாற்றங்கள் இலங்கை தீவின் புரட்சிகரமான அரசியல் சமூக வெளியை திறந்து விட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மையானது.
அந்த அடிப்படையில் தற்போது இலங்கையின் அரசியல் வெளியில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நியமித்தல் என்ற கொள்கை ரீதியான முடிவுக்கு தமிழ் சிவில் சமூகத்தினர் முன்வந்திருப்பது இலங்கைத் தீவின் அனைத்து இனங்களுக்கான அனைத்து வகை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அடித்தளங்களை இடும் என்பது திண்ணம்.
ஈழப் போராட்டத்தின் விளைவால் இலங்கை தீவினுள் ஏற்பட்ட புரட்சிகரமான விளைவுகளை சற்று பார்ப்போம். 1954 ஆம் ஆண்டு நேரு - கொத்தலாவல ஒப்பந்தம் மலையக மக்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தது.
அதன் அடிப்படையிற்தான் மலையக மக்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் மலையகத்தில் ஒரு தொகையினரை நாடு கடத்தியும் இருந்தது.
இந்தப் பின்னணியில் ஈழப்போராட்டம் உருப்பெற்றதன் விளைவாக இலங்கைத் தமிழர் சார்ந்த விவாகரங்களை ஆய்வு செய்வதற்காக 1980இன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற்கு கள ஆய்விற்காக வந்த ஊர்மிளா பட்னிஸ் மலையக கல்விச் சமூகத்துடனும், யாழ் பல்கலைக்கழகச் சமூகத்துடனும் மலையக மக்கள் தொடர்பாக நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டு உண்மைகளை கண்டறிந்தார்.
அதனை அவர் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் சமர்ப்பித்தார் என்று கருத இடமுண்டு. இலங்கையிலிருந்து மலையக மக்களை திருப்பி அழைத்தலை இனி இந்தியா ஏற்காது என 1982இல் இந்திரா காந்தி அரசாங்கம் அறிவித்தற்கு இதுவும் துணைசேர்த்திருக்க முடியும்.
இந்த அறிவிப்பை அடுத்துத்தான் இலங்கை அரசு திருப்பி அனுப்புவதென முடிவு செய்யப்பட்டு இருந்த மலையக மக்களுக்கான குடியுரிமையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1986க்கும் 1988க்கும் இடைப்பட்ட காலத்தில் அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.
இங்கே ஈழவிடுதலைப் போராட்டத்தின் விளைவால் மலையகப் பகுதிகளில் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற போராட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கும், மலையக மக்களை சாந்தப்படுத்தி மலையகத்துக்குள் முடக்கி வைப்பதற்குமான தந்துரோபாயமாகவுமே குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு ஈழப்போராட்டத்தினால் ஏற்பட்ட நிர்பந்தம் என்றே கொள்ள வேண்டும். போராட்டங்கள் பல வகைப்பட்ட பரிமாணங்களை சமூகத்தில் ஏற்படுத்தும் திறன் வாய்ந்தது.
போராட்டம் ஈழத் தமிழ் மக்களிடையே சாதி, மத, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பவற்றை எல்லா தளங்களிலும் இறுக்கமாக பதிய வைத்துள்ளது.
பிரதேச, மாவட்ட, கிராம ரீதியாக பின்தங்கியிருந்த தமிழ் சமூகத்தில் ஒரு பரஸ்பர சமத்துவத்தையும், கல்வி வளர்ச்சியையும், அறிவியல் வளர்ச்சியையும் போராட்டம் தூண்டி இருக்கிறது.
அதன் விளைவால் சமூகவியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறே யுத்தத்தின் விளைவால் பெருந் தொகை ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள்.
இந்தப் புலப்பெயர்வு தாயகத்தின் தாய் நிலத்தில் தமிழ் மக்களின் செறிவை குறைத்தது என்பது உண்மைதான். ஆனாலும் புலம்பெயர்ந்தவர்களுடைய பொருளியல் ஈட்டமும், கல்வி வளர்ச்சியும், சர்வதேச அரசியல் பிரசன்னமும் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச அரசியலில் ஒரு நிலையான தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்தும், அவர்களுக்கென்று ஒரு அரைகுறையான தமிழக அரசு இருந்துங்கூட அவர்களுக்கென்று ஒரு சர்வதேச அரசியல் தளம் கிடையாது.
ஆனால் வெறும் 35 லட்சம் தமிழ் மக்களைக் கொண்ட ஈழத் தமிழர்களுக்கு இன்று ஒரு பலமான சர்வதேச அரசியல் தளம் உண்டு என்றால் அது ஈழப்போராட்டத்தின் விளைவினால் ஏற்பட்டதே.
அது மட்டுமல்லாது தமிழ் மொழிக்கான அந்தஸ்தும், அதற்கான வரலாற்று பாத்திரமும், பங்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தினாற்தான் சர்வதேச சமயப்படுத்தப்பட்டது என்பதையும் மறந்து விடக்கூடாது.
வளர்ச்சியும் நிலைபேறும்
ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு பேரழிவுகளை தந்தது என்பதும் உண்மைதான். பேரிடர்களை தந்தது என்பதும் உண்மைதான். சொல்லனா துன்பங்களை, மனித உரிமை மீறல்களை, மனித இனம் காணாத கொடூரங்களை ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது என்பதும் உண்மைதான்.
ஆனாலும் இவை எல்லாவற்றையும் கடந்து மனித உரிமை சார்ந்தும், சமத்துவம், சகோதரத்துவம் சார்ந்தும் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மாத்திரமல்ல அவற்றின் தேவையும் வலுவாக உணர வைக்கப்பட்டது.
ஈழத் தமிழர்கள் சர்வதேச ரீதியாக அரசியல், பொருளியல், அறிவியல் வளர்ச்சிக்கு இந்தப் போராட்டமே உந்து சக்தியாக இருந்திருக்கிறது.
ஆகவே நன்மையான விடயங்களில் இருக்கக்கூடிய தீமைகளை கண்டறிவதும், தீமைகளில் இருந்து நன்மைகளை கண்டறிவதும் நுண்மான் நுழைபுலன் மிக்க ஆய்வுகளின் கடமையாகிறது.
அதுவே எதிர்கால வளர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் உறுதுணையாக இருக்கும். எனவே விளைவுகளில் இருந்துதான் செயல்களை எடைபோட வேண்டும்.
ஈழத்தமிழர், மலையக தமிழர், இஸ்லாமிய மக்கள் என அனைவரின் கல்வி வளர்ச்சிக்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மனித உரிமைகளுக்கான தேவையையும், அடிப்படையையும் அதற்கான விழிப்புணர்வையும் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியிருந்தது.
இன்றைய மலையகத் தமிழர்களுடைய அரசியல், பொருளியல், கல்வி வளர்ச்சிக்கு வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட போராட்டம் பெரும் உந்து சக்தியாக இருந்திருக்கிறது.
சிந்தனையை தூண்டி செயலாற்ற உந்தியிருக்கிறது. அவ்வாறே முஸ்லிம் மக்களுடைய ஐக்கியம், அரசியல், கல்வி வளர்ச்சிக்கும், பொருள் ஈட்டத்திற்கும் ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கிறது.
குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கும் அரசு துறை சார் வேலை வாய்ப்பிற்கும், தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஈழப் போராட்டத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியே நின்றதனால் சிங்களப் பெருந்தேசியவாதம் அவர்களை பிரித்தெடுத்தும், அரவணைத்ததும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக அவர்களை பயன்படுத்தியதன் மூலமும் இஸ்லாமிய சமூகம் ஒரு பாரிய வளர்ச்சிப் பாதைக்கு செல்வதற்கு வழி சமைத்திருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட. வீழ்ச்சியின் பின்னணியிற்தான் சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களக் கிறிஸ்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறுப் படுகொலையையும் முஸ்லிங்களுக்கு நேரடியான இராணுவ - சமூக ஒடுக்கு முறையையும் பரிசாக வழங்கியது.
அதேபோல 39 நாடாளுமன்ற ஆசனங்கனைக் கொண்டிருந்த ஜே.வி.பி முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியை அடுத்து, 3 ஆசனங்களாகச் சுருங்கியமையும் கண் முன் தெரியும் பச்சை உண்மைகளாகும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பேரழிவையும், வகை தொகை இன்றி மனித இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
இரண்டாவது இழப்பை சிங்களச் சமூகம் சந்தித்து இருக்கிறது. யுத்தத்தில் பெருந்தொகை சிங்களப்படைவீர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மனித உரிமை மேம்பாடு
இவ்வாறாக இரண்டு தேசிய இனங்களுக்கும் இடையிலான இடைவெளியின் பின்னணியில் சிங்கள அரசிடமிருந்து பலவித நலன்களையும் முஸ்லிம் மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதும் களயதார்த்தம்.
ஆகவே, ஈழப் போராட்டம் என்பது இஸ்லாமிய மக்களை பொறுத்த அளவில் ஒளிமயமான அரசியல், பொருளியல், கல்வியியல் எதிர்காலத்துக்கு வித்திட்டு வழி சமைத்துக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
இதனை எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு அறிவியல் பூர்வமாக இவை பார்க்கப்பட வேண்டுமே தவிர இங்கே பொறாமை, சூது, வஞ்சகம், விருப்பு, வெறுப்பு, காழ்புணர்ச்சி என்பவற்றிற்கு அப்பாற்பட்டதாக புரட்சிகரமான விளைவுகளை மட்டுமே மையப்படுத்தியதாகவே அலசி ஆராயப்படுகிறது.
அவ்வாறே சிங்கள சமூகத்தை பொறுத்த அளவில் புரட்சிகரமான சமத்துவமான சோசலிச அரசை உருவாக்க முனைந்த ஜே.வி.பியினர் 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டு படுமோசமாக அழித்தொழிக்கப்பட்டார்கள்.
ஆனாலும் மிகக் குறுகிய காலத்தில் 16 ஆண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு தம்மை வளர்த்துக் கொண்டார்கள்.
1988 -1989ஆம் ஆண்டு சிங்கள தேசத்தின் பெரும்பகுதியை தமது அதிகாரம் செல்லக்கூடிய அளவில் செல்வாக்கு செலுத்துமளவிற்கு பேரெழுச்சி அடைந்திருந்தனர்.
அதுவும் ஈழப் போராட்டத்தின் விளைவுதான். அதாவது ஈழப் போராட்டம் ஒரு கட்ட வளர்ச்சி அடைந்து சர்வதேச தலையீடுட்டுடனான இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதன் விளைவுதான் ஜே.வி.பி யினுடைய மீள் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது.
ஜே.வி.பியினுடைய இரண்டாம் கட்ட எழுச்சி என்பது சிங்கள சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அரசியலில் அவர்களை ஒரு பங்குதாரர்களாக தயார்படுத்தியது.
இலங்கை தீவில் கொய்கம சிங்கள உயர் குலத்தை மீறி தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புக்குள் இருந்து ஒரு ரணசிங்க பிரேமதாசா இலங்கையின் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடிந்தது.
ஈழப் போராட்டத்தினால் விளைந்த விளைவுகளினால் ஜேவிபியின் எழுச்சியும் அதன் தொடர் விளைவால் பிரேமதாசா பெரும் நெருப்பாற்றை கடந்து இலங்கை ஜனாதிபதி நாட்காலியில் அமர முடிந்தது.
சாதி ஒடுக்குமுறை சிங்கள சமூகத்தில் எவ்வாறு உச்சநிலையில் இருந்தது என்பதற்கு பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டதும் பிரதமர் நாற்காலியில் உண்மையில் அமர வேண்டியவர் சி.பி.டி சில்வா.
ஆனால் அவர் கரவ சாதியைச் சேர்ந்தவர் என்பதனால் அவரை விடுத்து கோய்கம சாதியைச் சார்ந்த பாஷாபெரமுன கட்சியின் ஒரே உறுப்பினராக இருந்த தகநாயக்காவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் நாற்காலியில் அமர்த்தியது என்பது தக்க உதாரணமாகும்.
இவ்வாறு மிகக் கடுமையான சிங்கள சாதி பாகுபாடு அரசியலில் அவற்றை உடைத்துக் கொண்டு பிரேமதாசா வந்தார் என்றால் அது ஈழ விடுதலைப் போராட்டத்தின் புரட்சிகர விளைவே ஆகும்.
அவ்வாறே சிங்கள ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து உருவாகிய ஜே.வி.பியினரின் மூன்றாம் கட்ட எழுச்சி 2005ஆம் ஆண்டு ஏற்படுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவச் சமநிலையை அடைந்து 2002ஆம் ஆண்டு ரணில் - பிரபா ஒப்பந்தம் நேர்வே அரசின் அனுசரணையுடன் சர்வதேச பரிமாணம் பெற்ற வேளையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் இனவாதம் பேசி 2005ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 39 ஆசனங்களை பெற்று பெரு வளர்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த பெரு வளர்ச்சி என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட விளைவின் மறுபக்க வளர்ச்சியே ஜே.வி.பியின் வளர்ச்சியாக அமைந்தது.
அதேநேரம் 2009இல் விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 2010 தேர்தலில் ஜேவிபி மூன்று ஆசனங்களை பெற்று அவர்களும் வீழ்ச்சி அடைந்தனர் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, இலங்கை அரசியலில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியும் அதனுடைய வீழ்ச்சியும் நேரடியாக சிங்கள சமூகத்தின் புரட்சிகர வளர்ச்சியில் வீழ்ச்சியிலும் நேரடியாக பங்கு வகித்திருக்கிறது. தடைகளை உடைத்திருக்கிறது. மனித உரிமைக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க செய்திருக்கிறது.
ஜனநாயகத்தை மீட்டெடுக்க உதவியிருக்கிறது. எல்லா வகையான புரட்சிகர மாற்றங்களையும் பிரசவித்திருக்கிறது என்பதைத்தான் வரலாறு பதிவு செய்கிறது. வெற்றுக் கண்களுக்கு அழிவுகளும் இழப்புகளும் தான் கண்முன்னே தோன்றும்.
ஆனால், அவற்றுக்குப் பின்னே உள்ள விளைவுகளின் சாதகங்களை கணிப்பிடுவதற்கும், பார்வையிடுவதற்கும் ஆழ்ந்த வரலாற்று அரசியல் பார்வை வேண்டும்.
அத்தகைய ஒரு பார்வை தான் இங்கே நோக்கப்படுகிறது. ஒரு மறைக் கணியத்திலும் நேர்கணியம் உண்டு என்பதை ஈழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து கணிப்பீடு செய்யப்பட வேண்டும்.
அது யார் யாருக்கெல்லாம் நன்மையை கொடுத்தது என்பதுதான் இங்கே கவனத்திற்குறியது. எனவே, ஈழ விடுதலைப் போராட்டமும் சரி, தமிழ் மக்கள் திரட்சி அடைவதாயினும் சரி, அல்லது தமிழர் தேசம் அல்லது தமிழ் பேசும் மக்கள் ஐக்கியப்படுகின்றபோது அதனால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சிங்கள சமூகத்திலும் இஸ்லாமிய சமூகத்திலும் புரட்சிகர வளர்ச்சிகளுக்கு வித்திடுகின்றது, தூண்டுகோலாக அமைகிறது, நிர்பந்தங்களை ஏற்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று இலங்கைத் தீவில் எழுந்திருக்கின்ற மனித உரிமை சார்ந்த குரல்கள், ஜனநாயகம் பற்றிய குரல்கள், சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, சாதி, மத ஒடுக்குமுறை என்பவற்றிற்கு எதிரான குரல்கள் எல்லாம் இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தில் இருந்தே வீரியம் பெற்றிருக்கின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
புரட்சிகர எழுச்சியை ஏற்படுத்த வல்ல ஈழ விடுதலைப் போராட்டத்தை சிங்கள ஆளும் குழாம் நசுக்க முற்படுவதன் மூலம் இலங்கை தீவை சிங்கள பௌத்த ஆளும் குழாம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க பெரு முயற்சி எடுக்கிறது.
இந்நிலையில், இலங்கைத் தீவு எதிர்நோக்கி இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் பேசும் மக்களுடைய ஐக்கியத்தை வலுப்படுத்த முடியும், தமிழர் தமது பலத்தை எடை போட முடியும், தம்மைத் தாமே உணர்ந்து கொள்ள முடியும், அரசியல் நீக்கம் செய்யப்படும் இளைஞர்களை அரசியல் மயப்படுத்த உதவும், தமிழ் மக்கள் எப்போதும் கொள்கைக்காக ஓர் அணியில் நிற்பர் என்பதை நிரூபிக்க முடியும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களுடைய திரட்சியும் எழுச்சியும் இலங்கை தீவின் சிங்கள இஸ்லாமிய மலையக மக்களின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ஜனநாயக மீட்சிக்கும் அத்திவாரமாக அமையும்.
எனவே, தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைத்து வகையிலும் ஐக்கியத்துக்கு உட்பட்டு தமிழ்த்தேசியமாக திரள்வதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கை தீவின் மனித உரிமை மேம்பாட்டிற்கும் ஜனநாயக விமோசனத்திற்கும் பிரம்மாக்களாகவும் விளங்க முடியும்.
இந்த வகையில் வரலாற்றியலின் விதியின்படி தமிழீழப் போராட்டம் அடிப்படையில் பல புரட்சிகரமான பரிமாணங்களைக் கொண்டது என்பதையும் அது ஈழத்தமிழருக்கு அப்பால் மலையக மக்கள் முஸ்லிம் மக்கள் கூடவே ஜே.வி.பியினர் மற்றும் சிங்கள அரசியலில் நிலவும் சாதிக்கொடுமுடியைத் தகர்த்தல் போன்ற பல மாற்றங்களுக்கு வழிவகுத்ததையும் கருத்திற் கொள்ளவேண்டும்.
ஆதலால் ஈழத்தமிழரின் போராட்டத்தில் மிளிரும் பலம் உள்ளடக்கத்தில் பேணிவளர்க்கப்பட வேண்டும். இதன்படி ஈழத்தமிழர் பலமடைவதிலிருந்து தாமும் பலமடைய முடியும் என்பதைப் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும் கவனத்திற் கொள்வது அனைவருக்கும் நல்லது.
ஆதலால், தமிழினத்தைப் பலப்படுத்தவல்ல பொதுவேட்பாளர் விடயத்தை நன்னோக்குடைய அனைவரும் கவனத்திற் கொள்வது நல்லது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 May, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.