சுவிஸில் நடந்து முடிந்த பொதுவாக்கெடுப்பு! அமுலாகும் சட்டங்கள்
2019ல் பெருந்தொற்று ஏற்பட்டதுமுதல் பெருந்தொற்றுச் சட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் நாடாளுமன்றம் தமது நடவடிக்கைகளை முடிவுசெய்து இயங்கி வந்தது.
பின்னர் கோவிட் 19 எனும் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் வரையப்பட்டு, இச்சட்டம் கடந்த மார்ச் 2021 உருவாக்கப்பட்டு, யூன் 2021ல் பொதுமக்கள் வாக்கெடுப்பில் 60 வீதமானோர் இச்சட்த்திற்கு ஒப்புதல் அளித்து கோவிட் 19 சட்டம் மக்கள் ஆணைபெற்ற சட்டமாக மாறியிருந்தது.
இச்சட்டத்தின் அடிப்படையில் தொழில் இழப்பிற்கு நிதிப் பொருள் ஈடுகளும், தொழில் நிறுவனங்கள், கலைபண்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறையினர்களின் வருமான இழப்பிற்கு உரிய ஈடும் அளித்து வரப்பட்டுகின்றது.
மேலும் இச்சடத்தின் வரைவின்படியே மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி சான்றும் அளித்து வரப்படுகின்றது.
சுவிசில் உள்ள நேரடி மக்களாட்சி உரிமையின்படி 2021 மார்ச்சில் வரையப்பட்ட மேற்காணும் கோவிட் 19 சட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பு கோரப்பட்டிருந்தது. இவ்வாக்கெடுப்பு 28.11.2021 நடைபெற்றது.
வலதுசாரிகளும் கடும்போக்காளர்களும் நடைமுறையில் உள்ள இச்சட்டத்திற்கு எதிராக பெரும் பரப்புரை செய்து வந்தனர். ஆனாலும் சுவிஸ் மக்கள் 62 வீதமானோர் சுவிஸ் அரசிற்கு ஆதரவு அளித்து வாக்களித்துள்ளனர்.
இதன்படி திட்மிட்டபடி உதவித்திட்டங்கள் தொடரப்படும், தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும், நோயுற்றோர், நோயில் நலம் அடைந்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படுவோர் தகவலை நடுவனரசு பராமரிக்கவும், மாநில அரசிற்கு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தாதியர் - செவிலியருக்கு வலிமை சேர்ப்பு
சுவிசின் மாநில மற்றும் நடுவனரசு மருத்துவமனைகளிலும் மற்றும் இல்லங்களிலும் செவிலியர் பணிகளில் இருக்கும் தொழிலார்களுக்கும், முன்னர் இத்துறையில் பணியாற்றி பிற துறைகளில் பணிபுரிவோரை மீண்டும் நலவாழ்வுத்துறைக்கு அழைத்து வருவதற்கும் ஊக்கத் திட்டத்தினை அளிக்கவேண்டும் எனும் வாக்கெடுப்பினை மக்கள் வாக்கெடுப்பாக நடாத்த பாராளுமன்றத்தினை நலவாழ்வு ஆர்வம்கொண்டோர் நாடி இருந்தனர்.
போதியளவு கைழுத்துக்களுடன் இக்கோரிக்கை நாடாளுமன்றத்திற்கு கிடைக்கப்பெற்று, இதனை பலகட்ட நாடாளுமன்ற வாதங்களில் சேர்க்கப்பட்டு நேற்று மக்கள் வாக்கெடுப்பிற்கு இச்சட்டம் முன்வைக்கப்பட்டது.
61வீதமான மக்கள் இச்சட்டத்திற்கு ஆணை வழங்கி உள்ளார்கள். இனிவரும் 8 ஆண்டுகளுக்குள் 1,000,000,000 பிராங்குகள் செவிலியல் - தாதியர் கற்கைத்துறைக்கு ஒதுக்கப்படவுள்ளது.
தாதியர் பணிநேரம் மற்றும் பணிச்சூழல், பணியாளர் நலன் என்பன இம்முதலீடு ஊடாகவும் மேலும் பல் சிறப்புத் திட்டங்கள் ஊடாகவும் மேம்படுத்தப்படும்.
நீதித்துறை வாக்கெடுப்பு
இதுவரை உச்சநீதி மன்றத்திற்கான நீதிபதிகளை நாடாளுமன்றமே தெரிவு செய்து வருகின்றது. இதன்படி கட்சிகள் இப்பதவிகளுக்கு தமது உறுப்பினர்களை முன்மொழிவது வழமையாகும்.
நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட 246 உறுப்பினர்கள் வாக்குச் செலுத்தி நீதிபதிகளைத் தெரிவு செய்வர். இந்நடைமுறை 1848 முதல் வழமையாக உள்ளதாகும். தற்போது இச்சடத்தினை மாற்ற வேண்டி மக்கள் ஆணைபெற வேண்டுகை வைக்கப்பட்டது.
மாற்றத்தை வேண்டுவோர் முன்வைத்த காரணங்கள் இவைஆகும்:
நாடாளுமன்றத்தால் தெரிவுசெய்யப்படும் நீதிபதிகள் தமது கட்சிக்கு உட்பட்டவராகவும், அரசியல் ரீதியில் ஏதேனும் கட்சியின் கொள்கைப் பற்றுக்கொண்டவராகவும் இருப்பர்.
ஒரு கட்சியால் முன்மொழியப்பட்டு நீதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் தனது ஊதியத்தில் இருந்து கட்சிக்கு கொடை அளிக்கின்றார். அவர் அவ்வாறு கொடை அளிக்காது விட்டால் அல்லது கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டால் மீள் தெரிவிற்கு கட்சி ஆதரவினை அளிக்காது எனும் அச்சம் நிதிபதிக்கு எழலாம்.
ஆகவே கட்சிகளால் நீதிபதிகள் தெரிவுசெய்யப்படுவது தவிர்க்கப்பட்டு, தகமை உள்ளவர்கள் நீதிபதி ஆணையம் முன் உரிய தகையுடன் விண்ணிப்பித்து, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்விற்குரியவர் சீட்டுக்குலுக்கல் முறையில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனும் சட்ட முன்மொழிவு 28.11.2021 வாக்கெடுப்பிற்கு வந்திருந்தது.
மக்கள் இதனை நிராகரித்து விட்டனர். 31.9 வீதமானவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையில் நீதிபதி தெரிவுசெய்யவும், 64.7 இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஆகவே 1848 போன்று தொடர்ந்து நீதிபதிகள் நாடாளுமன்றத்தால் தெரிவுசெய்யப்படும் நடைமுறையே தொடரும்.
தொகுப்பு - சிவமகிழி