தோட்ட மக்களின் வாழ்க்கையை நரகத்துக்கு தள்ளிய ராஜபக்ச அரசு - சஜித் விளாசல் (Photos)
"நாட்டைச் சாம்பலாக்கிய ராஜபக்ச கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கின்றது. அந்தக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்படுத்தப்படும் 'பிரபஞ்சம்' வேலைத்திட்டத்தின் கீழ் 38 ஆவது கட்டமாக கொட்டகலை ஹட்டன் கேம்பிரிஜ் கல்லூரிக்கு பாடசாலை பேருந்து ஒன்றை நேற்று (29.10.2022) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை கூறினார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தரிசு நிலத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்குத் திருப்புவதும், வாழ்நாள் முழுவதும் கூலித் தொழிலாளிகளாக இருந்த பெருந்தோட்டத்துறை மக்களை சிறு தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர்களாக மாற்றுவதும் யதார்த்தமானதும் நடைமுறைமானதுமான செயற்பாடாகும். இவ்வாறு நாம் கூறும் போது சில தரப்பினர் இதைக் கேலி செய்தனர்.
மக்களின் வாழ்க்கையை நரகத்துக்கு தள்ளிய ராஜபக்ச அரசு
அன்று எனது முன்மொழிவை கேலி செய்த தரப்பினர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து தோட்ட மக்களின் வாழ்க்கையை நரகத்துக்குத் தள்ளியதும், பொறாமையால் இனவாதத்தைத் தூண்டி விட்டு நாட்டை அழிவிற்கு தள்ளினர்.
ஒவ்வொரு தேயிலை புதரின் கீழும் பெருந்தோட்ட மக்களின் தீராத துன்பங்களும் கண்ணீரும் இருக்கின்றன. அந்த மக்களின் வாழ்க்கையை நரகத்துக்குத் தள்ளும் பாவத்துக்குப் பொறுப்பு ராஜபக்ச அரசுதான்.
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய புரட்சி
ஐக்கிய மக்கள் சக்தியால் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான புரட்சியை ஆரம்பித்துள்ளோம். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்படும்.
நாட்டை அழித்த ராஜபக்ச கும்பல் சாம்பலைத் துடைத்துவிட்டு எழ முயற்சிக்கின்றது. நாடு முழுவதும் சாம்பலாக்கப்பட்ட பின்னரே அந்தக் கும்பல் எழுந்து நிற்கத் தயாராகி வருகின்றது.
நாட்டை வங்குரோத்தடையச் செய்துமக்களின் வாழ்வை நரகத்துக்குத் தள்ளிய ராஜபக்ச கும்பலுக்கு மீண்டும் ஆட்சியை வழங்குவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.
அந்தக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" எனவும் குறிப்பிட்டிருந்தார். கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்டார்.
செய்தி - திருமாள்