முடிவுக்கு வந்தது அலரி மாளிகைக்கு எதிரில் நடந்த போராட்டம்
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு எதிரில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அங்கிருக்கும் போராட்டகாரர்கள் தீர்மானித்துள்ளனர்.
அலரி மாளிகை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த போராட்டகாரர்கள்
போராட்டகாரர்கள் அந்த இடத்திற்கு நோ டீல் கம என பெயரிட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது, அவரை அந்த பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு அமைத்திருந்த கூடாரங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், கோ ஹோம் ரணில் என்ற பெயரில் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
கோட்டா கோ கம
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள், மருந்து, உணவு தட்டுப்பாடு காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது அரசாங்கத்தை பதவி விலக கோரி கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு கோட்டா கோ கம என பெயரிடப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலக கோரி அலரி மாளிகைக்கு எதிரில் மைனா கோ கம என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து அலரி மாளிகைக்கு எதிரில் நோ டீல் கம என்ற பெயரில் ரணிலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.