பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டத்தில் தடுப்பு காவலில் உள்ள நபருக்கு சட்ட பாதுகாப்பு
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூல வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டமூல வரைவை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் கடந்த 11 ஆம் திகதி சமர்ப்பித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை தடுத்து வைக்கக் கூடிய காலம் இந்த புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்படும்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் பாதுகாப்புடன் இருக்கின்றாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நீதவானுக்கு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்லவும் புதிய திருத்தச் சட்டத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் இருக்கும் இடத்திற்கு சட்டத்தரணிக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் தனது உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் திருத்தச் சட்டத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதனிடையே தொழிலாளர் இழப்பீட்டு திருத்தச் சட்டமூல வரைவும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் தினம் ஒன்றில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.



