வெளியுலகத்திற்கு தெரிந்த ரகசியங்கள் - பாதுகாப்பற்ற இடமாக மாறிய ஜனாதிபதி மாளிகை
எதிர்கால ஜனாதிபதிகள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதியுயர் பாதுகாப்பு இல்லமாக இருந்த ஜனாதிபதி மாளிகையில் உள்ள இடம் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உலகிற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்கால ஜனாதிபதிகளும் பாதுகாப்பின்றி அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்படும் என பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு அச்சுறுத்தலாக அமையலாம்
அவசர காலங்களில் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படும் நிலத்தடி பதுங்கு குழி உட்பட அனைத்து அறைகளின் இருப்பிடம் உலகறிந்த நிலையில், இது பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளதாக பாதுகாப்பு பிரதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இங்கு தங்கியிருப்பது அடுத்த ஜனாதிபதிக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு தரப்பினர் கருதுகின்றனர்.
ஆகையினால் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியை தங்க வைப்பதற்கு மற்றொரு பாதுகாப்பு இல்லம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.