நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன் - கோட்டாபய ராஜபக்ச
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இன்று நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றுமு் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுகையிட்டப்பட்டது. இதனையடுத்து நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ச பின்னர் சிங்கப்பூருக்கு சென்றார்.
புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான செயல்முறையைத் தொடங்குவதற்கு இலங்கையின் நாடாளுமன்றம் இன்று கூடியது. இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்க, ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை முறையாக வாசித்தார்,
அதன் உள்ளடக்கங்கள் முன்னர் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார்
இலங்கையின் நிதி நெருக்கடியானது தனது பதவி காலத்திற்கு முந்திய பல வருடமுறையற்ற நிர்வாகத்தின் மூலம் ஏற்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்பும் தொகை வீழ்ச்சியடைந்த கோவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் தீவிரமடைந்தது.
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, அனைத்துக் கட்சி அல்லது ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது உட்பட, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும் என அவரின் பதவி விலகல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சவின் ஏக பிரதிநிதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
எனினும், இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்கும் முக்கியப் போட்டியாளர்களில் ரணிலும் ஒருவர், எனினும், அரச எதிர்ப்பாளர்களும் ரணில் பதவியேற்பதை விரும்பவில்லை. ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மேலும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஆளும் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஊழலுக்கு ராஜபக்ச குடும்பம் மற்றும் சகாக்களே காரணம்
பொருளாதார நிலைமை காரணமாக சிரமப்படும் நாட்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான அவசர நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஊழலைக் குறைப்பது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சமூக அமைதியின்மை சர்வதேச நாணயநிதித்துடனான நிதி நிவாரணம் தொடர்பான விவாதங்களை பாதிக்கும் என்பதால், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 6 வீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சியடையும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான வீதிப் போராட்டங்கள் ஜூலை 9 அன்று தீவிரமடைவதற்கு முன்னர் பல மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எதிர்ப்பாளர்கள் பணவீக்கம், அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் ஊழலுக்கு ராஜபக்ச குடும்பம் மற்றும் சகாக்களே காரணம் என குற்றம் சாட்டினர்.
ராஜபக்ச குடும்பம் பல ஆண்டுகளாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. கோட்டாபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச, போராட்டம் தீவிரமடைந்தமையால் ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார். ஜூன் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார்.
நாட்டில் எரிபொருள் வரிசைகள் வழக்கமாகிவிட்டன, அதே சமயம் அந்நியச் செலாவணி இருப்பு பூஜ்ஜியத்திற்கு அருகில் குறைந்துள்ளது. எரிபொருள் ஏற்றிய மூன்று கப்பல்களில் முதலாவது கப்பல் இன்று இலங்கை வந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று வாரங்களில் பின் நாட்டை வந்தடையும் முதல் எரிபொருள் ஏற்றுமதி கப்பல் இதுவாகும். எதிர்வரும் நாட்களில் ஏனைய கப்பல்கள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.