பின்வாசல் வழியாக வந்தவர் அடக்குமுறை திட்டங்களை வகுத்து வருகிறார்:குமார் குணரட்னம்
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் என காட்டிக்கொள்ளும் ரணில் விக்ரமசிங்க, அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இருக்கும் பேச்சுரிமை மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைகளை கோழைத்தனமான தாக்குதல் ஊடாக சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றத்திற்குள் மக்களின் நிலைப்பாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை, இதனால், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சகல அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் ஆணையின்றி பின்வாசல் கதவு வழியாக ஜனாதிபதி பதவிக்குள் புகுந்த நபர், மக்களை அடக்கும் திட்டங்களை வகுத்து வருகிறார்.
அடக்குமுறைக்கு அஞ்சி தப்பியோடாது ஒருங்கிணையுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்படட தாக்குதலில் கலந்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் எனக் கூறிக்கொண்டவர்கள், முகத்தை மூடியவாறு அடையாளம் காண முடியாதபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது முகத்தை மூடிக்கொண்ட நபர்களின் தாக்குதலை படையினர் தடுக்கும் விதத்தை காணலாம் எனவும் குமார் குணரட்னம் கூறியுள்ளார்.