ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் - இல்லையெனில் முழு அடைப்பு போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பதில் ஜனாதிபதியாக செயற்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லையெனில் 1,000 தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தால் (TUCC) ஜூலை 18ம் திகதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். ஹர்த்தாலால் நாடு முழுவதும் ஸ்தம்பிதம் ஏற்படும்.
இதனால் மருத்துவமனைகள், துறைமுகங்கள், வங்கிகள் மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சதி செய்து மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கூறுவோம்.
விக்ரமசிங்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை சிறையில் அடைப்பதன் மூலம் போராட்டத்தை களங்கப்படுத்துகிறார் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
400க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
எவ்வாறாயினும், ஹர்த்தாலில் 400க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிட்டால், ஜூலை 18ம் திகதி நடைபெறும் ஹர்த்தால் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதாரம், தபால், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்.
நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையின் மையமாக கொழும்பு கோட்டை இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை தன்னிடம் இருப்பதாக விக்ரமசிங்க கருதினால், எதிர்வரும் தேர்தலில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
குறுக்குவழிகளை கண்டுபிடித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது மரியாதையற்ற செயலாகும். ஜூலை 18க்குள் பதில் கிடைக்காவிட்டால், ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கத்தையும் போராட்டக் களத்திற்கு அழைப்போம்.
எனவே, அடுத்த 72 மணிநேரத்தை சரியாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பு என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.