நடுத்தர வயதினரின் அரசியல்
அண்மையில் மருத்துவ நிபுணரான ஒரு நண்பர் கேட்டார் “என்னுடைய பிள்ளை தான் ஏன் வெளிநாடு போகக்கூடாது என்று கேட்டால், அந்தப் பிள்ளைக்கு நீ ஏன் நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு பொருத்தமான காரணம் ஏதும் உண்டா?” என்று.
இந்தக் கேள்வி யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தரவர்க்கப் பெற்றோர் பலர் மத்தியில் உண்டு. இக்கேள்விக்குப் பொருத்தமான விடை எத்தனை தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டு? பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஒரு புலப்பெயர்ச்சி அலை ஓடிக்கொண்டிருக்கிறது.
சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மே 18ஐ முன்னிட்டு “தமிழ் மிரர்” பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் அற்புதமான ஒரு கார்ட்டூனை வரைந்திருந்தார். அதில் 2009 மே 18ஆம் திகதியன்று மகிந்த கட்டுநாயக்காவில் வந்திறங்கும் காட்சி ஒரு பெட்டிக்குள் வரையப்பட்டிருக்கிறது.
புலம்பெயர்வு
மகிந்த விமான நிலையத்தில் இறங்கியதும் குனிந்து தரையைத் தொட்டு வணங்குகிறார். ஆனால் இப்பொழுது 15ஆண்டுகளின் பின், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து புலம்பெயர்வோர் உலகின் வெவ்வேறு நாடுகளின் தலைநகரங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கி அந்தந்த விமான நிலையங்களில் நிலத்தைத் தொட்டு முத்தமிடும் காட்சி மற்றொரு பெட்டிக்குள் வரையப்பட்டுள்ளது.
அதுதான் உண்மை. யுத்தத்தில் வென்றெடுத்த நாட்டைவிட்டு அதன் மக்களே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.போர்க்காலத்தில் வெளியேறியது வேறு பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறுவது வேறு.
பொருளாதார நெருக்கடிக்குள், தாய் நாட்டிலேயே நின்று, கடுமையாக உழைத்து தன்னையும் தனது தேசத்தையும் நிமிர்த்த வேண்டும் என்று ஓர் இளைய தலைமுறை ஏன் சிந்திக்கவில்லை? குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் இம்முறை வெளியேறிக் கொண்டிருப்பது இளையோர் மட்டுமல்ல.
அதிக தொகையில் படித்தவர்கள், பட்டதாரிகள், முகாமையாளர்கள், தொழில் முனைவோர், மருத்துவர்கள், தாதிதியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்… என்று பல்வேறு வகைப்பட்ட துறைசார்ந்த நிபுணத்துவமுடையவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கிடைத்த உத்தியோகப்பற்றற்ற புள்ளி விவரங்களின்படி, கனடாவுக்கும் லண்டனுக்கும் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்று கணக்கிடப்படுகிறது. இது தவிர வழமையாக குடும்பங்களின் மீளிணைவு என்ற அடிப்படையில் மணமக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு வெளியேறும் பெரும்பாலானவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வயதுக்கு வந்தவர்கள்.அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யத் தேவையான வாக்காளர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டார்கள் என்று கூறலாமா? “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடி, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து அந்த மண்ணை விட்டுப்போனால் போதும் என்று கருதும் ஒரு மனோநிலை,ஏன் மேலெழுகின்றது? ஏனென்றால்,தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் தலைமைகள் இல்லை. நம்பிக்கையூட்டும் முன்னுதாரணங்கள் குறைந்துவிட்டன.
ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற, தான் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு மற்றவரைக் குறை கூறுகின்ற, முன்னுக்குப் போகும் ஒருவரை யாரோ பின்னுக்கிருந்து இயக்குகிறார்கள் என்று சந்தேகிக்கின்ற, அவநம்பிக்கை மிகுந்த ஒரு மக்கள் கூட்டமாக தமிழ்மக்கள் மாறி வருகிறார்களா? இந்த மண்ணிலேயே நின்றுபிடிப்போம், தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்று நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? ஒரு காலம் அரசியல் என்பது தியாகங்கள் செய்வது, அர்ப்பணிப்புகள் செய்வது, உயிரைக் கொடுத்துப் போராடுவது என்று இருந்த ஒரு சமூகத்தில், இப்பொழுது அரசியல் என்பது பெட்டி கைமாறுவது, யாரோடாவது “டீலுக்குப்” போவது, மதுச் சாலைகளுக்கான அனுமதிகளுக்கு விலை போவது… என்று மாறிவிட்டதா? தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்களையே சந்தேகிக்கிறார்கள்.அவர்களையே திட்டுகிறார்கள்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது, ஜனாதிபதி கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.தமிழ்மக்கள் மத்தியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுகிறார்கள். இளவயதினர் பொருளாதார விவகாரங்களில்தான் நாட்டமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அது சரியா பிழையா என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் அரசியல் சமூகத்தைக் குறித்த அவருடைய பார்வை அது.
தமிழ் பொது வேட்பாளர்
ஒரு காலம் தமிழ் இளையோர் தமது உயிர்களைத் துச்சமாக மதித்து அரசியலை முன்னெடுத்தார்கள். முழு உலகத்துக்கும் அபூர்வமான அனுபவமாக அந்தப் போராட்டம் அமைந்திருந்தது.
அவ்வாறு மகத்தான தியாகங்களைச் செய்த ஒரு மக்கள் கூட்டம், மகத்தான பெருஞ்செயல்களைச் செய்த ஒரு மக்கள் கூட்டம், சித்தர்களையும் சான்றோர்களையும் மேதைகளையும் நிபுணர்களையும் மகத்தான படைப்பாளிகளையும் உற்பத்தி செய்த ஒரு சமூகம், இன்று அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல சிதறிக் கொண்டு போகின்றதா?
வடக்காய் கிழக்காய், சாதியாய் சமயமாய், கட்சிகளாய் குழுக்களாய், ஊர்ச் சங்கங்களுக்குள் எதிர் குழுக்களாய், ஆலய பரிபாலன சபைகளுக்குள் எதிரெதிர் குழுக்களாய், கட்சிகளுக்குள் அணிகளாய்ப் பிரிந்து நிற்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அரசியலிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அரசியலிலும் தமிழ் மக்கள் இரண்டாகி நிற்கிறார்கள். தமிழ்மக்கள் அதிகளவு தாங்களே தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த பெரிய கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது.
கோவில்களின் ஆலய பரிபாலன சபைகளும் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இவ்வாறு சிதறுண்டு சிறுமைப்பட்டுப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து உங்களுடைய இளைய தலைமுறைக்கு அரசியலில் நாட்டம் குறைந்து விட்டது என்ற பொருள்பட ரணில் கூற வருகிறாரா? அவர் கூறிய மற்றொரு விடயம், தமிழ் பொது வேட்பாளருக்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணையப் போவதில்லை என்பது.
தமிழ்ப் பொது வேட்பாளரின் விடயத்தில் குடிமக்கள் சமூகங்களுக்கு இடையே காணப்படும் அளவுக்கு ஐக்கியம் கட்சிகளுக்கு இடையே இல்லை என்பது உண்மைதான். தங்களுக்கு இடையே ஐக்கியப்பட முடியாத கட்சிகள் எப்படி மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியும்? கடந்த 15 ஆண்டுகால கட்சி அரசியலானது ஐக்கியத்தை கட்டியெழுப்பத் தவறிவிட்டது. குடிமக்கள் சமூகங்களின் தலையீட்டால்தான் ஓரளவுக்கு குறுகிய கால விவகார மைய ஐக்கியங்கள் சாத்தியமாகின.
இப்பொழுதும் குடிமக்கள் சமூகங்கள்தான் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டை உருவாக்கி, அந்த அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி, அதற்கூடாக பொது வேட்பாளரை முன்னிறுத்த முயற்சிக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், கட்சி கடந்த ஒருவர்.
சாதி சமயம் கடந்த ஒருவர். பிரதேச வேறுபாடுகளைக் கடந்த ஒருவர். தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் எல்லா வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து அவர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிற்பார் என்று குடிமக்கள் சமூகங்கள் கூறுகின்றன.
தமிழ்ப்பொது வேட்பாளருக்காகத் திரட்டப்படும் வாக்குகள் ஒரு தேசத்துக்கானவை. ஒரு தனி நபருக்கானவை அல்ல. அங்கு ஒரு தனிநபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ஆனால் அவர் எந்த ஒரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார். எந்த ஒரு சமயத்தையோ அல்லது சாதியையோ அல்லது பிராந்தியத்தையோ அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது.
தமிழ் ஐக்கியம்
தமிழ் மக்களை இப்பொழுது பிரித்து வைத்திருக்கும் எதனையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. அவர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடாக நிற்க வேண்டும். அவர் ஒரு பிரமுகராகக்கூட இருக்கவேண்டும் என்று இல்லை. அவர் தமிழ் மக்களின் ஐக்கியத்தைப் பிரதிபலிப்பார்.
அல்லது தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஓர் அடையாளம். அவ்வளவுதான். அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் அந்தத் தேர்தல்மூலம் தனக்குக் கிடைக்கும் பிரபல்யத்தையும் பலத்தையும் எதிர்காலத்தில் கட்சித் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒர் உடன்படிக்கை அவரோடு எழுதப்பட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படக்கூடிய ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தனக்காக வாக்குக் கேட்கப் போவதில்லை. ஒரு கட்சிக்காக வாக்குக் கேட்கப்போகவில்லை. தமிழ் ஐக்கியத்திற்காகத்தான் வாக்குக் கேட்பார். தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்காகத்தான் வாக்குக் கேட்பார்.
தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரண்டுவிட்டார்கள் என்பதனை நிரூபிப்பதற்காக வாக்களிப்பது. அதாவது தமிழ் மக்கள் தங்களுக்குத் தாங்களே வாக்களிப்பது. கடந்த 15 ஆண்டுகால தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் எனப்படுவது அரசியல்வாதிகள் தங்களுக்காக வாக்குச்சேர்க்கும் ஒரு பாரம்பரியம்தான்.
ஒவ்வொரு வேட்பாளரும் தனக்கென்று காசு செலவழித்து தனக்கென்று விசுவாசிகளை உருவாக்கி தனக்காக வாக்கு சேகரிக்கும் ஒரு கட்சி அரசியல் பாரம்பரியம். அதிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒரு கட்சிக்குள்ளேயே ஒரு வேட்பாளர் சக வேட்பாளரை போட்டியாளராகப் பார்ப்பார்.
ஆனால், பொது வேட்பாளர் என்று வரும்பொழுது அங்கே ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்காகவோ தனது கட்சிக்காகவோ வாக்குச்சேர்க்கப் போவதில்லை. அவர்கள் தேசத்துக்காக வாக்குச்சேர்க்க வேண்டியிருக்கும். தேசத்துக்காக தமது சொந்தக் காசை செலவழிக்க வேண்டியிருக்கும். தேசத்துக்காக தமது உழைப்பை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். தேசத்துக்காக அர்ப்பணித்து உழைக்க வேண்டியிருக்கும்.
அதாவது தேசத்துக்காக வாக்கு சேர்ப்பது. இது கடந்த 15ஆண்டுகளாகக் அருகி வரும் ஒரு போக்கு. இதைப் பலப்படுத்தினால் தமிழ் மிதவாத அரசியலில் நேர்மையானவர்கள், கண்ணியமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது தமிழ் அரசியலை ஒரு புதிய தடத்தில் ஏற்றும்.
அதற்கான தொடக்கம்தான் தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிறுத்தும் நோக்கத்தோடு கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. கட்சிகள் அதற்குத் தயாராக இருந்தால், குடிமக்கள் சமூகங்களின் வேலை இலகுவாகிவிடும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கட்சிக்குள் நடந்த தேர்தலின் பின் விளைவுகள் தமிழ்மக்கள் சிறுமைப்பட்டு விட்டார்கள் என்பதை நிரூபித்தது. அப்படிதான், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஒரு தேர்தல் தமிழ் மக்கள் சிதறிப் பலங்குன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கக் கூடாது. அது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரண்டுவிட்டார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப் வேட்பாளரைத்தவிர வேறு தெரிவு உண்டா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 02 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.