திருத்தப்பணிகளுக்கு முன்மொழியப்படாது புறக்கணிக்கப்படும் முல்லைத்தீவு வீதி
முல்லைத்தீவில் மக்கள் பயன்படுத்தி வரும் வீதி ஒன்றின் காட்சி கவலையடைய வைப்பதாக இருக்கின்றது.
40 வருடங்களாக முழுமையான திருத்தப்பணிகளுக்கு உட்படாத மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வீதி தொடர்பில் உரிய வகையில் கவனம் செலுத்தப்படாது இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
முல்லைத்தீவு முறிப்பில் உள்ள இந்த வீதியின் முழு நீளத்தின் பெரும்பகுதி மக்களின் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையிலேயே இருக்கின்றது.
விவசாய நிலங்களையும் பல வீதிகளின் இணைப்புச் சந்திகளையும் கொண்டுள்ள இந்த வீதியின் ஊடாக சிற்றாறு ஒன்றும் பாய்கின்றது.
நீண்டகால திருத்திப்பணிகளுக்கு முன்மொழியப்படாது இந்த வீதியினை தவிர்த்து வருவது தமக்கு கவலையளிக்கின்றதாக இந்த வீதியினைப் பயன்படுத்தி வரும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
[WG9QYZD ]
வீதியின் நிலை
தண்ணீரூற்று குமுழமுனை வீதியில் முறிப்புச் சந்தியில் வரும் முதல் பாதை இதுவாகும். இது கிழக்கு பக்கமாக உடுப்புக்குளம் வரை நீண்டு செல்லும் 3 கிலோமீற்றர் வீதியின் நிலை தொடர்பிலேயே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
வீதிகளின் சந்திப்புக்கள் ஏழினைக் கொண்டுள்ள இந்த வீதி இரண்டு நாற்சந்திகளையும் ஐந்து முச்சந்திகளையும் ஒரு சிற்றாற்றுப் பாலத்தினையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
முறிப்புச் சந்தியில் இருந்து உடுப்புக்குளம் நோக்கி 1.5 கிலோமீற்றர் தூரம் தார் இடப்பட்ட வீதியாக தற்போது செப்பம் செய்யப்பட்டுள்ளது.இந்த செப்பனிடப்பட்ட பகுதியில் முதலாவது நாற்சந்தி அமைந்துள்ளது.
தார் இடப்பட்ட பகுதி முடிவுறும் இடத்தில் இருந்து இறுதி நாற்சந்தி வரையான பாதை சேதமடைந்த நிலையில் இருப்பதனை அவதானிக்கலாம்.
இந்த வீதியின் வழியே மூன்றாவது சந்தியை கடக்கும் போது சிற்றாற்றுப் பாலம் அமைந்துள்ளது.
மழைக்காலங்களில் மட்டுமல்லாது வருடத்தின் ஏனைய நாட்களிலும் இந்த சிற்றாறின் ஊடக நீர் பாய்ந்தவாறே இருக்கும் என அப்பகுதி வாழ் மக்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
பாதையின் தார் இடப்பட்ட பகுதி முடியும் இடத்தில் இருந்து ஐந்தாவது சந்தி வரை மக்கள் குடியிருப்புகள் இல்லை.அப்பகுதிகளில் தென்னம் கோப்புக்கள் மற்றும் முந்திரிகை, நெற் செய்கை நிலங்கள் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
அறுத்தோடிய பாதையின் பகுதி
நூறு மீற்றர் தூரத்திற்கு நீரோட்டத்தினால் பாதை மிகவும் மோசமான முறையில் சேதமடைந்துள்ளது.
வீதியின் ஒரங்களினால் பயணப்பட்டு வந்த மக்களுக்கு நீரோட்டத்தினால் ஏற்பட்ட மண்ணரிப்பினால் அந்த வாய்ப்பும் இப்போது இல்லாத நிலை தோன்றியுள்ளது.
பாதையில் ஏற்பட்டுள்ள பாரிய பள்ளங்களினால் தென்னம் தோட்டங்களுக்கு தங்கள் உழவியந்திரங்களையும் ஏனைய வாகனங்களையும் கொண்டு வருவதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அப்பகுதி தென்னம் தோப்பு உரிமையாளர் சிலரிடம் பேசும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
உழவியந்திரம் செல்ல முடியாத அளவுக்கு பாதை மண் அரிப்புக்கு உள்ளாகி பாரிய பள்ளங்கள் தோன்றிய நிலையில் இருப்பதனை அவதானிக்கலாம்.அத்தோடு இப்பாதையில் நீர்க் கசிவும் சதுப்புத் தன்மையும் இருப்பதையும் உந்துருளிகளில் பயணிப்பது கூட கடுமையானதாக இருப்பதாகவும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நீண்ட காலமாக இந்த பாதையின் இப்பகுதி இவ்வாறே இருப்பதாக தனக்கு தோன்றுவதாக பாடசாலை மாணவன் ஒருவர் இப்பாதை பற்றி கருத்துக் கேட்ட வேளை குறிப்பிட்டார்.
சிற்றாற்று பாலத்தில் உள்ள நீரில் தான் மீன் பிடிக்க வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் இந்த பாதை ஒரே வெள்ளமாகவே இருக்கும்.தண்ணிக்குள்ளால் தான் நடந்து செல்ல வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அருகில் உள்ள காணி நிலங்களிலும் பார்க்க இந்த பாதை தாழ்வாக இருப்பதையும் காணிகளின் நிலங்களில் சதுப்புத் தன்மையை அவதானிக்க முடியவில்லை.பாதையில் மட்டுமே அவதானிக்க முடிகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக பாதை வெள்ள நீரோட்டத்தினால் மண் அரிப்புக்கு உள்ளாகி வருகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த பாதையின் நிலையை தொடர்பில் பொறியியல் துறையில் கற்றலில் ஈடுபட்டு வரும் பல்கலைக் கழக மாணவர் ஒருவரிடம் கருத்துக் கேட்ட வேளை குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
மணற்காடாக இருக்கும் பாதை
சதுப்பத் தன்மையோடு மண்ணரிப்புக்குள்ளாகி பாரிய பள்ளங்கள் உள்ள பாதையின் பகுதியை கடந்து உடுப்புக்குளம் நோக்கிப் போகும் போது மணற்காடாக கிடக்கும் பாதையின் நூறு மீற்றர் தூரத்தினைக் காணக் கிடைக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மணற்காட்டை இந்த பாதையில் குவிந்துள்ள மணல் ஊடாக பயணிக்கும் போது தனக்கு தோன்றுவதாக உடுப்புக்குளத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தோடு வந்து சேர்ந்த மண் இது என அவர் மேலும் எடுத்துரைத்திருந்தார். பாரிய பள்ளங்களினூடாக கடந்து பின் மணல் பாதையூடாக கடந்து பெரும் தடைதாண்டல் மூலமே உடுப்புக்குளத்தினை அடைய முடிகின்றது என்பதை அவர் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டிருந்தார்.
நீரினுள் இருக்கும் முச்சந்தி
மணல்காடாக இருக்கும் பாதையின் பகுதியை கடந்தால் சிற்றாற்றுப் பாலத்திற்கு முன் உள்ள வயல் நிலங்களுக்கு செல்லும் பாதை இணையும் முச்சந்தி வரும்.
அந்தச் சந்தி நீருக்குள் இருப்பது போலவே தோன்றுகின்றது.சந்தியை முறித்து நீர் பாய்ந்தோடியவாறு இருக்கின்றது.அதனை அடுத்து சிற்றாற்றுப் பாலம் இருக்கின்றது.பாலம் பாரியளவிலான சிதைவுக்குள்ளாகி பாலம் இருப்பதனையே இனம் காண்பது கடினமானதாக இருக்கிறதை அவதானிக்க முடிகின்றது.
பல தடவை முயன்றும் இந்த பாலம் இதுவரை சரி செய்யப்படவில்லை.உடுப்புக்குளம் மற்றும் முறிப்பு என இரு கிராமங்களின் எல்லையாக இந்த பாலத்தினையே உடுப்புக்குளம் மக்கள் கருவதனை உடுப்புக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் தலைவர் குறிப்பிட்டிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பொருத்தமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள சீமெந்துப் பாலம் சற்றுத் தொலைவில் பயனற்ற முறையில் இருப்பதையும் சுட்டிக் காட்டல் பொருத்தமானதாக இருக்கும்.
என்று கிடைக்கும் தீர்வு
40 வருடமாக முழுமையாக திருத்தி மக்களின் பயன்பாட்டுக்கு வழங்காத பாதையாக இந்தப் பாதை இருப்பதாக முறிப்பு மற்றும் உடுப்புக்குளம் கிராமத்தில் வாழும் முதுசங்களின் கருத்தாக இருக்கின்றது.
பிரதேச செயலகத்தினால் இந்த பாதையின் நிலை தொடர்பில் நேரடியாக வந்து ஒரு முறை ஆய்வில் ஈடுபடும் போது தொடர்ந்து வரும் காலங்களிலாவது மாற்றங்கள் ஏற்பட்டு இந்தப் பாதை முழுமையாக திருத்தப்படுவதற்கு வாய்ப்பேற்படும் என ஒய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
முறிப்பு மற்றும் முள்ளியவளை, தண்ணீரூற்று, உடுப்புக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பயன்தரு நிலங்களுக்கான பாதையாக இது இருப்பதால் இந்த பாதையின் புனரமைப்பு தொடர்பாக அனைவரிடத்திலும் ஒருமித்த கருத்தாக விரைவாக புனரமைத்து தரு வேண்டும் என்பது இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
உரிய தரப்புக்கள் கவனமெடுத்து மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |