ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த இலக்கு! சர்வதேச பரப்பில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 32 கியூபா குடிமக்கள் கொல்லப்பட்டதாக கியூபா அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கியூபாவில் இன்றும், நாளையும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் (3) வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியதோடு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர். அமெரிக்கப் படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள கியூபா, இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது.
மதுரோ, வெனிசுலா ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அவருக்கு கியூபா பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையை ஆக்கிரமிப்புச் செயல் மற்றும் அரசு பயங்கரவாதத்தின் குற்றவியல் செயலாகக் கருதுவதாக கியூபா அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த இலக்காக கியூபா இருக்கக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மற்றும் கியூபா மீது கவனம்
வெனிசுலா மற்றும் கியூபா மீது சிறிது காலமாக தான் கவனம் செலுத்தி வருவதாகவும் ரூபியோ கூறியுள்ளார்.

அதன்படி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஒரே இரவில் கைது செய்யப்பட்டமை குறித்து ஓரளவு ஆச்சரியப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை எதிர்த்த முன்னாள் கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவை ஆட்சியிலிருந்து அகற்றும் முயற்சி உட்பட, லத்தீன் அமெரிக்காவில் இராணுவத் தலையீடுகளின் நீண்ட வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவின் சமீபத்திய தலையீடுகள் தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.