கோவிட்டை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே! - இராணுவத் தளபதி
"பெருந்தொற்று நோயான கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எம்மிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் தடுப்பூசியே. எனவே, கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தயங்கக்கூடாது.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வேண்டும்." என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நாட்டில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 இலட்சம் தடுப்பூசிகளை இதுவரை ஏற்றியுள்ளோம். அடுத்த இரு மாதங்களில் பெரும்பான்மையான மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசிகளை ஏற்ற முடியும். சில இடங்களில் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் பின்னடிக்கின்றார்கள்.
மக்கள் இவ்வாறு அச்சமடைவது ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தத் தடுப்பூசியில்தான் கோவிட்டை எதிர்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இதேவேளை, நாட்டில் சில இடங்களில் மட்டும் 'டெல்டா' உள்ளிட்ட உருமாறிய கோவிட் வைரஸ்களின் அச்சுறுத்தல் நிலை இருக்கின்றது.
எனினும், நாட்டை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளைப் பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. ஆனால், நாட்டின் அடுத்த கட்ட நிலைமைகளுக்கு அமையத் தீர்மானங்கள் எப்போதும் மாறலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்து, சுகாதார தரப்பினர் ஒவ்வொரு நாளும் இது குறித்து தரவுகளைப் பதிவு செய்கின்றனர். அத்துடன் கோவிட் தடுப்புச் செயலணி கூட்டத்திலும் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும்.
தற்போதுள்ள நிலையில் இரண்டாயிரத்துக்கும் குறைவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மரணங்களும் நாளாந்தம் ஐம்பதுக்கும் குறைவாகப் பதிவாகின்றன.
எனவே, நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியும். ஆனால், வைரஸ் தொற்று பரவவில்லை எனக் கருத்தில் கொள்ளக்கூடாது எனச் சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
அடுத்த ஒரு மாதகாலம் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். மக்களின் செயற்பாடுகளில்தான் இது தங்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
