நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய்!வெளியான தகவல்
ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதற்கென வருடாந்தம் 15 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மரணமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு அவர்களது பாரியார்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
15 கோடி ரூபா நிதி
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ள பௌத்தமத தேரர்கள் ஐந்துபேரும் இவர்களுள் உள்ளடங்குகின்றனர்.
ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் மாலினி பொன்சேகா, ஜீவன் குமாரதுங்க, உபேக்ஷா சுவர்ணமாலி மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவும் ஆகிய நான்கு கலைஞர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் விளையாட்டுத்துறை தொடர்பான உறுப்பினர்களாக அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரியவும் காணப்படுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம்
மேலும் அரசியல், சமய மற்றும் கலை உள்ளிட்ட பல்துறை நிபுணரான ஜே.ஆர்.ஜி. சூரியப்பெருமவும் அந்த பட்டியலில் உள்ளடங்குகின்றார்.
சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் (54,000) மூன்றில் ஒருபகுதி 18,095, மேலும் 25,000 கொடுப்பனவுடன் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஓய்வூதியம் தயாரிக்கப்படுகிறது.
அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினரொருவர் 43,095 ரூபாவை ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்கிறார். அத்துடன் 25,000 ரூபா கொடுப்பனவு அவர்களது ஓய்வூதியத்தில் இணைக்கப்பட்டமை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் காலத்திலாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.