தென்னிலங்கையில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் புதிய ஒப்ரேஷன்!
இலங்கையின் சமகால அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி சில வருடங்கள் கடந்துள்ள போதிலும், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மீட்சி காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவினை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் உள்ளது. எனினும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் தொற்று, பொருத்தமற்ற பொருளாதார கொள்கைகள், ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலான பதவி மோதல் என்பன ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் இன்று நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்னுமொரு தேர்தல் நடைபெற்றால் பெரும்பான்மை ஆதரவை பெற்ற ராஜபக்ஷர்கள் படுதோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மீது ஏற்றப்பட்ட பொருளாதார சுமையே பிரதான காரணமாகும்.
இந்நிலையில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வளவு விரும்பத்தகாததாக இருந்தாலும், மக்கள் ஆதரவு அரசுக்கு இன்னும் இருக்கிறது என்பதையும், அதில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷர்கள் உள்ளனர். இதற்கான வேலைத்திட்டங்களை உள்ளக ரீதியாகவும் வெளிப்படையாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த வாரம் அநுராதபுரம் சல்தாது மைதானத்தில் நடைபெற்ற மக்கள் எழுச்சி பேரணியாகும். அடுத்தக்கட்டமாக அழுத்தங்களுக்கு அடிபணியும் போக்கைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களை குறிவைத்து நடத்தப்படும் பிரச்சாரமாகவே இந்த பேரணியும் காணப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டம் ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தையும் கண்டியில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தையும் நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளன.
ஜே.ஆர். ஜயவர்தனவின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைப் பார்க்கும் போது, அனுராதபுரம் சல்காது மைதானத்தில் அரசாங்கம் நடத்திய பேரணி அனைவருக்கும் நினைவுப்படுத்தியுள்ளது.
ஜே.ஆர் அரசாங்கம் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று பொதுஜன பெரமுன அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் படும் பொருளாதார நெருக்கடிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் விவசாயிகள் செழிப்பாக இருந்தனர். உரப் பிரச்சினை இல்லை. மேலும், அந்த நேரத்தில் பொருட்களை வாங்க வரிசைகளில் நின்ற போதிலும் பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருந்தது. நிம்மதியாக வாழ்ந்தனர். இதன் காரணமாக மக்கள் இன்று போல் அதிக அழுத்தத்தை உணரவில்லை.
இன்று வரிசையில் நின்றும் கட்டுப்படியாகாத விலைக்கு பொருட்கள் வாங்கப்படுகின்றன. அந்த விலை நாளுக்கு நாள் மாறுபடுகின்றது. 1970-1977 ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று ராஜபக்ஷர்களின் ஆட்சியில் வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அப்போதைய காலப்பகுதியை இன்றும் நினைவுப்படுத்தி பேசும் நிலையில் சமகால அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்றைய பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் பொருளாதார கொள்கை இல்லை. அதன் விளைவுதான் இன்று நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் செய்த முக்கிய தவறுகளால் நாடு குழப்பமான ஒரு வலையாக மாறியுள்ளது. ஆனால், அரசு தனது பிடியை தளராமல் அரசியல் பலத்தை காட்ட பொதுக்கூட்டங்களைக் காட்டத் தொடங்கியுள்ளது.
“ரோம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ வீணை வாசித்தது” போல் ராஜபக்ஷர்கள் இன்று பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். தற்போது மாகாண சபைகள் மட்டுமன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளது.
இன்று ராஜபக்சக்கள் தேர்தலைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. வாக்குகளைப் பெறும் அதிகாரத்தை பொதுக் கூட்டங்களில் இருந்து எடுக்க முடியாது.
2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச, காலி மைதானத்திற்கு பெரும் கூட்டத்தை வரவழைத்தார். கூட்டத்தைக் கண்டு ராஜபக்ஷர்களும் பயந்தனர். ஆனால் கோட்டாபய அமோக வெற்றி பெற்றார்.
நீண்டகால யுத்தத்தில் இருந்து சிங்களவர்களை காப்பாற்றிய கோட்டாபய, நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என பலரும் எதிர்பார்த்தனர். எனினும் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளன.
இயற்கையான உணவு என்ற கோஷத்துடன் கோட்டாபயவினால் முன்கொண்டு வரப்பட்ட உர சர்ச்சையை இன்று ஒட்டுமொத்த விவசாயிகளையும் அரசாங்கத்திற்கு எதிராக மாற வைத்துள்ளது. இரசாயன பசளை மூலம் லாபத்தை ஈட்டி வந்த விவசாயிகள் இன்று சேதன பசளையில் வாழ்வை இழந்துள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜபக்ஷர்களின் வாக்கு வங்கியில் மிகவும் முக்கிய பங்கை வகிக்கும் கிராமபுற மக்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த சமகால அரசாங்கம் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தை இல்லாது செய்து அடுத்த தேர்தல் களத்தை சந்திக்க ராஜபக்ஷர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைத்திட்டங்களை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்துள்ளனர். எனினும் அது மக்கள் மனங்களில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பதை அடுத்த தேர்தல் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராஜபக்ஷர்களை, மன்னன் துட்டகைமுனுவின் பரம்பரை என வர்ணித்த சிங்கவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
