போராட்டக்காரர்கள் கோரிய புதிய அரசமைப்பும் நிறைவேறும்! ஜனாதிபதி ரணில் உறுதியளிப்பு
அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் செயற்றிட்டங்களுக்கு அரசமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டம் உறுதுணையாக இருக்கும். எனினும், இது தற்காலிக ஏற்பாடே. போராட்டக்காரர்கள் உட்பட அனைவரும் விரும்பும் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். அதற்கான பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும். நான் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
20 ஆவது திருத்தச் சட்டம்தான் நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியது. இதனால் சர்வதேசத்திடம் இலங்கை கையேந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டம்
நாடு மீண்டெழ அரசமைப்பில் அவசரமாகத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இந்தநிலையில், 22 ஆவது திருத்தச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குறிப்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, இந்தச் திருத்தச் சட்டம் நிறைவேற முழு மூச்சாகப் பாடுபட்ட நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனிச்சிறப்புக்குரியவர்" - என்றார்.