சீனாவிற்கு உலக நாடுகள் சவால் அல்ல! இலங்கையிலிருந்து குரல் எழுப்பும் அரசியல் முக்கியஸ்தர்
நாடு ஒருபோதும் வங்குரோத்து நிலைமையினை அடையாது. சீனாவுடன் இலங்கை தொடர்ந்து நல்லுறவினை பேணும். சீனாவிற்கு உலக நாடுகள் ஏதும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன முதலீடுகளை விமர்சிப்பது தவறான செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கோவிட் -19 வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த இரண்டு வருட காலத்தில் அதிக நிதியை செலவிட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் தற்காலிகமானது.
கோவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பூகோள பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல.
நாடு வங்குரோத்து நிலைமையினை அடையப்போவதாக எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்.
நாடு ஒருபோதும் வங்குரோத்து நிலைமையினை அடையாது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.
சீனாவுடன் இலங்கை தொடர்ந்து நல்லுறவினை பேணுவது அவசியமாகும். நெருக்கடியான சூழ்நிலைமையில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
சிறந்த பொருளாதார கொள்கையினை முன்னிலைப்படுத்தி சீனா பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ளது.
சீனாவிற்கு உலக நாடுகள் ஏதும் சவால் அல்ல. சீனா இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது.
சீனாவின் முதலீடுகளை விமர்சிப்பது தவறான செயற்படாகும்.வெளிநாட்டு முதலீடுகள் ஊடாக மாத்திரமே முன்னேற்றமடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.



