இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசியல் தீர்வு இல்லை! அரசைச் சாடிய ஸ்ரீநாத்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, இதுவரையான காலப்பகுதியில் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முன்மொழிவையும் முன்வைக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.
அத்துடன், நம்பிக்கை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் கடந்தகால யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் வரவு - செலவுத் திட்டத்தில் இல்லாமை பாரிய குறைபாடாகும் என குறிப்பிட்டார்.
ஒதுக்கப்பட்ட நிதி முறை
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
வடக்கு மற்றும் கிழக்கில் 13 ஆயிரம் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம், பேசாலைத் துறைமுகத்துக்கான நிதி ஒதுக்கீடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட அரசின் சில முன்மொழிவுகளை வரவேற்றார்.

எனினும், இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் காணப்படுவதுடன், ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் கல்வி கற்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும் என்றும், மக்களின் பொருளாதார உரிமைகளுடன் வாழ்வியல், கலாசார மற்றும் அரசியல் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொருளாதார நடவடிக்கை
அரசு இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும், அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்படவில்லை.
மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளும் வரவு - செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் நிலவும் காணிப் பிரச்சினை, கால்நடை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயக் கட்டுமானப் பணிகளில் காணப்படும் தடைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உத்தரவாதங்கள் அவசியம். இது தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam