படுகுழியில் வீழ்ந்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசு! யாருக்கு தேசிய அரசாங்கம்...
மீண்டும் தேசிய அரசு பற்றிய உரையாடல்கள் கேட்கத்தொடங்கியிருக்கின்றன. எப்போதெல்லாம் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசிற்கு வீழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தேசிய அரசு அமைக்கப்படும்.
இத்தேசிய அரசில் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் வலிந்து உள்ளீர்க்கப்படும்.
அவ்வாறு வலிந்து உள்ளீர்க்கப்படும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு தனிப்பட்ட சலுகைகள் உட்பட, அமைச்சுப் பதவிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைமைப் பதவிகள், இன்னபிற உயர்பதவிகளும் பரிசாக வழங்கப்படும்.
தேசிய அரசின் தற்போதைய தேவை
வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்த முடியாத நிலை, அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, இலங்கையை மையப்படுத்திய சீன - இந்திய - அமெரிகக் புவிசார் அரசியல் போட்டி, நாட்டு மக்களது அரச எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றன இலங்கையில் நிலையற்ற ஆட்சிச்சூழலை ஏற்படுத்தியிருக்கின்றன.
நிலையற்ற ஆட்சிச்சூழல் என்பது பௌத்த சிங்கள தேசிய அரசியலிலும் தளம்பல் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பெருமளவிலான சிங்கள இளைஞர்கள் நாட்டை விட்டே வெளியேறத் தயாராகிவிட்டனர். எனவே இதிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் மேலும் கடனையே வாங்கவேண்டும்.
ஐ.எம்.எவ்வின் கடன் பின்னணி
இந்தியா, சீனாவை தவிர இலங்கைக்குக் கடன்தர யாருமில்லை. இவ்விரு நாடுகளும் வழங்கும் கடன்கள், நன்கொடைகள் இந்நாட்டை - பௌத்த சிங்கள தேசியவாதத்தை மேலும் படுகுழியிலேயே விழுத்தும்.
எனவே இந்த இரண்டு நாடுகளையும் தவிர்த்துப் பார்த்தால் இலங்கையின் கண்ணுக்குத் தெரிவது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புக்கள்தான்.
இந்த அமைப்புக்களின் கடனளிப்புக்குப் பின்னால், அமெரிக்காவின் அரசியல் நலன்கள், ஒப்பந்தங்கள், படையத் தேவைகள் இருப்பினும் இலங்கைக்கு தற்போதைக்கு வேறு தெரிவில்லை. சிக்கலானதாகவே இருப்பினும், இலங்கைக்கு கழுகின் சிறகுகளையே பற்றிக்கொள்ளவேண்டிய இக்கட்டுநிலை.
ரணிலின் தேசிய அரசு தயார்
தொடர் மக்கள் போராட்டங்களும், ஆட்சிக் குழப்பங்களும் நிலவுகின்ற நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்காது. அந்த அமைப்பின் முதற்கோரிக்கையே ஆட்சி நிலைப்புத்தான்.
எனவேதான் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சர்வ கட்சிகளையும் இணைத்துத் தேசிய அரசினை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறங்கினார்.
அந்த முயற்சியில் பெருமளவிற்கு வெற்றியும் கண்டுவிட்டார். பலவீனமான எதிர்க்கட்சியும், பலமான ஜனாதிபதியையும் கொண்டதொரு நாடாளுமன்றம் தேசிய அரசாக மலரும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அமைச்சுப் பதவிகளுக்கான போட்டிகள், பேச்சுக்கள் தொடங்கியிருக்கின்றன.
தேசிய அரசு - அந்த நாள் ஞாபகம்
2015ஆம் ஆண்டில்தான் இலங்கை மக்கள் தேசிய அரசை சந்தித்தனர். மிகப்பெரும் மன்னர் வகையறாக்களாக வளர்ந்திருந்த ராஜபக்ச கொம்பனியை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கும், ராஜபக்சவினர் குடும்பச் சொத்தாகியிருந்த பௌத்த சிங்கள தேசியவாதத்தை மீள நிலைநாட்டவும் தேசிய அரசொன்று அவசியப்பட்டிருந்தது.
அந்தவகையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன இணைந்து நல்லாட்சி என்கிற அடையாளத்தோடு தேசிய அரசை அமைத்தன.
தேசிய அரசிற்காக வழங்கப்பட்டவை
சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவானார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகினார்.
இரு கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தேசிய அரசுக்குத் தூணாக நின்றிருந்த ஏனைய சிறுபான்மையினத்தவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவிகளும், ராஜாங்க அமைச்சுக்களும் வழங்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக அரியணையமர்ந்தார். அந்த சேவைக்காகக் கொழும்பில் வீடொன்றைப் பெற்றுக்கொண்டார்.
அம்பலமாகிய தேசிய அரசு
நல்லாட்சி எனப்பட்ட தேசிய அரசிற்கு அதிக சவால்கள் இருந்தன. ஆட்சி ருசியில் திழைத்திருந்த ராஜபக்சவினருக்கு ஆறுமாதங்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.
தொடர்ச்சியாக ஜனாதிபதி மைத்திரியையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தாக்கிக் கொண்டிருந்தனர். நாடாளுமன்றுக்குள் அடிதடியில் தொடங்கி, மிளகாயப்பொடி தாக்குதல் வரை நடத்தினர்.
ரணில் விக்ரமசிங்க தன்போக்கிற்குத் தாண்டவமாடினார். இதனால் குழம்பிப்போன மைத்திரிபால சிறிசேன ஐம்பத்தாறு நாள் ஆட்சிக்குழப்ப நாடகமொன்றை அரங்கேற்றி நாட்டு மக்களுக்குத் தேசிய அரசின் சுவாரஸ்யங்களை- பலம், பலவீனங்களை அம்பலப்படுத்தினார்.
சுமந்திரன் காப்பாற்றிய தேசிய அரசு
அமைதியாக ஓடிக்கொண்டிருந்த தேசிய அரசிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மகிந்த, அரசைக் கைப்பற்றிக்கொண்டார்.
இத்தோடு “தேசிய அரசு நசிந்துவிடும்“, “தாம் தப்பித்தோம்“ என ஆசுவாசப்பட்ட சிங்கள மக்களுக்கு, தன் சட்டப் புலமையால் “அதெல்லாம் முடியாதென” நிறுவினார் த.தே.கூவின் பேச்சாளர் சுமந்திரன்.
அரசியல் யாப்பின் பிரகாரம் ராஜபக்சவினரை இடையில் கொண்டுவந்து செருக முடியாது. அதற்கு அரசியல் யாப்பில் எவ்வித இடமும் இல்லை என வாதாடி ரணிலை மீண்டும் பிரதமராக்கினார். எனவே முதற்கண்டத்திலிருந்து தப்பித்தது தேசிய அரசு.
கம்பெரலிய - அபிவிருத்திக்கான யுத்தம்
தேசிய அரசு தப்பித்த கையோடு “கம்பெரலிய – அபிவிருத்திக்கான யுத்தம்” என்ற பெயரில் துரித மீள்கட்டுமானத் திட்டமொன்றை ஆரம்பித்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் இந்த யுத்தத்தை முன்னின்று நடத்தினர்.
மக்கள் பயன்படுத்தாத வீதிக்கு தார் மூலாம், பிள்ளைகள் விளையாடப் பயன்படுத்தாத மைதானத்திற்கு புதிய வேலி, சிறு மழைக்குக்கூடத் தாக்குப்பிடிக்காத கொங்றீற்றுப் பாலம் என அபிவிருத்திக்கான யுத்தம் எனும் நாடகம், பட்டிதொட்டியெங்கும் களைகட்டியது. தேசிய அரசின் பரபரப்பான பரப்புரையாகியது.
அடிவாங்கிய கூட்டமைப்பு
கம்பெரலிய போன்ற ஏமாற்று வேலைத்திட்டங்களாலும், முன் – பின் கூறிய பொய்களாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புப் பலமாக அடிவாங்கியது.
தேர்தல் நேரத்தில் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கையூட்டாகப் பணம் வாங்கினர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார்.
தேசிய அரசு காலத்தில் முன்வைக்கப்பட்ட இத்தகைய குற்றச்சாட்டுக்கள் கூட்டமைப்பின் வாக்குவங்கிச் சரிவிற்கு வித்திட்டது. தேசிய அரசின் கலைப்பிற்குப் பின் வந்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் கூட்டமைப்பு பெரும் சவாலை எதிர்கொண்டது.
அனுபவத்திலிருந்து பாடம்
மேற்கண்ட விதத்தில்தான் தேசிய அரசு குறித்த கடந்த கால நினைவைத் தமிழர்கள் கொண்டிருக்கின்றனர். மறக்கவே முடியாத அனுவங்களைப் பெற்றிருக்கின்றனர்.
இந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக்கொண்ட பின்னரே சிங்கள தேசிய அரசு குறித்த புரிதலோடு, அந்த அரசில் இணைவதா அல்லது இணையாமல் இருப்பதா அல்லது வெளியிலிருந்து ஆதரவளிப்பதா என்கிற முடிவிற்கு வரவேண்டும்.
மீண்டும் ஒரு முறை ஏமாற்றுப்படாமலிருப்பதற்கு சிங்கள தேசிய அரசு பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்.
தேசிய அரசல்ல சிங்கள தேசிய அரசு
இலங்கை போன்று சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான அரச ஒடுக்குமுறைகள் நிலவும் நாட்டுக்குத் தேசிய அரசு மிக முக்கியமானதும் தேவைப்பாடுடையதுமான ஆட்சியியல் முறைமையாகும்.
மூவினங்களின் பங்குபற்றலோடு சுழலும் அத்தேசிய அரசானது, மூவினங்களையும் சம அந்தஸ்தோடு கையாளுதல் நிகழ வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய அரசு என்பது மேற்பூச்சாக மட்டுமே இருந்திருக்கின்றது.
முழுக்கமுழுக்க பௌத்த சிங்கள தேசிய வாதத்தை உட்சாராக வைத்துத்தான் தேசிய அரசு கட்டமைக்கப்படுகிறது. எனவே தான் அதனை தேசிய அரசு என அழைப்பதிலும் பார்க்க, சிங்கள தேசிய அரசு என அழைப்பது பொருத்தமானதாகப்படுகின்றது.
இத்தகைய தேசிய அரசில் சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உண்டெனக் காட்டப்படினும், அதிகாரமியற்றும் - அதிகாரமியக்கும் அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி, பிரதமர், முக்கிய முடிவெடுக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாகவே இருப்பர்.
அவர்கள் கையெழுத்திடும் ஆணைகளை நிறைவேற்றவே சிறுபான்மை தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பயன்படுத்தப்படுவர்.
உலகத்தையும், அரசியலில் சமவுரிமை கோரும் தரப்பினரையும் ஏமாற்றும் இந்த அரசியல் நடத்தையில் மாற்றம் தேவை.
பௌத்த சிங்கள மனோபாவத்தைக் கட்டிக்காக்கும் இந்த அரசியல் நடத்தையில் மாற்றம் நிகழாத வரையில் அமைக்கப்படும் அனைத்துத் தேசிய அரசுகளுக்கும் ஒரே முகம்தான் இருக்கும்.
அது பௌத்த சிங்கள தேசியவாத முகம். அந்த மூளையினுள் வன்முறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் வறுமையிருப்பதில்லை.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
