இரகசியமாக திறக்கப்பட்ட அலுவலகம் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான நாடகமே - ஆ. லீலாதேவி
கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி மிகவும் இரகசியமாகத் திறக்கப்பட்ட காணாமற்போனோருக்கான அலுவலகம் எதிர்வரும் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான ஒரு நாடகமே என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளோம், இதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை. இதனை நாங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.
சர்வதேசம் ஓ.எம்.பி மீது மெல்லிய நம்பிக்கை வைத்திருந்தது. எனவே நாம் ஓ.எம்.பியின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதற்காக 2019.07.20 அன்று பலத்த ஆதாரங்கள் உள்ள ஐந்து சம்பவங்களை ஓ.எம்.பி அலுவலகத்திற்கு வழங்கினோம்.
இதனை அப்போது தலைவராக இருந்த சாலிய பீரிசும் ஏற்றுக்கொண்டு தீர்வினை தருவதாகக் கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதன் மூலம் இந்த ஓ.எம்.பி அலுவலகத்தினால் எதுவும் ஆகப்போவதில்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்தது.
இந்த நிலையில் தற்போது கோவிட் பரவல் காரணமாக ஒன்று கூடவோ, எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தவோ, முடியாதவாறு சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு இரகசியமாகக் கிளிநொச்சியில் ஓஎம்பி அலுவலகத்தைத் திறந்து செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
யாருக்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டதோ அவர்கள் எவருக்கும் தெரியாது இதனைக் கிளிநொச்சியில் இரகசியமாக மேற்கொண்டமைக்கான காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய அவர் சர்வதேசத்தையும், ஜெனீவாவையும் எதிர்கொள்வதற்காக அரசு போடும் நாடகமே இது என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பாகிய நாம் எட்டு மாவட்டங்களின் உறவினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள்.
எனவே நாம் கிளிநொச்சியில் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தை எதிர்கின்றோம். இச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வினவிய போது,
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளைக் கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றைக் கோரியிருந்தார்கள்.அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
