வரலாற்றில் அதிக விலையை தொட்டுள்ள FIFA டிக்கெட்டுகள்
உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த வார இறுதியில் 2022 உலகக் கிண்ணப்போட்டிகளை பார்ப்பதற்காக, கட்டாரின் டோஹாவை நோக்கிச் செல்லும்போது, அவர்கள் அனுமதிச் சீட்டுக்களுக்கு அதிக விலையை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்த்தவர்களுடன் ஒப்பிடுகையில், கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ளும் கால்பந்து ரசிகர்கள், அனுமதிச்சீட்டுக்களுக்காக கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிக கட்டணம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப் போட்டிக்கான அனுமதிகளுக்காக சராசரியாக 812 டொலர் செலவாகும் என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்
இந்த நிலையில் போட்டிகளுக்கான அதிகபட்ச அனுமதிக்கட்டணம் 5854.73 கத்தார் ரியாலாகவும், குறைந்தக் கட்டணம் 200.23 கத்தார் ரியாலாகவும் இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஒப்பிடும் போது கட்டார் போட்டிகளுக்கான கட்டணங்கள் அதிகம் என்றும், அதேநேரம் இறுதிப் போட்டிக்கான அனுமதிக்கட்டணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட 59 சதவீதம் அதிகம் என்றும் கெல்லர் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
கட்டாரின் கால் பந்தாட்ட உலகக் கிண்ணம், மிகவும் விலையுயர்ந்த உலகக் கிண்ணமாக கருதப்படுகிறது. ஆறு புதிய மைதானங்களை நிர்மாணிப்பதற்கும், நாட்டில் உள்ள மற்ற இரண்டு அரங்குகளை முழுமையாக சீரமைப்பதற்கும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
மூன்று மில்லியன் அனுமதிச்சீட்டுக்கள்
இந்நிலையில் தலைநகர் டோஹாவின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பும் அதிக செலவழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறும் உலகக் கிண்ணப்போட்டிகளுக்கான அனுமதிக்கட்டணங்களை பொறுத்தவரை, அங்குள்ள எட்டு மைதானங்களில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் அனுமதிச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உலகக் கால்பந்தாட்ட சம்மேளனமான FIFA தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் FIFA உலகக் கிண்ணத்தை நடத்தும் முதல் நாடாக
கட்டார் விளங்குவதும் முக்கிய நிகழ்வாகும்.