வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம்! உண்டியல் வர்த்தகம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்
உண்டியல் நிதி வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதாகவும் அப்படியானால், இந்த வர்த்தகத்துடன் அமைச்சரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதே அர்த்தம் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivad Cabraall) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டிற்குள் வெளிநாட்டுப் பணம் வரவில்லை என்பதையே நான் கூறினேன். வேறு இடத்தில் வியாபாரிகள் அந்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அந்த வெளிநாட்டுப் பணத்திற்கு இணையாக நாட்டுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் அந்நிய செலாவணி வராமல், பெருந்தொகையான பணத்தை நாட்டுக்குள் செலுத்த முடிந்த வர்த்தகம் என்ன என்பதை நினைக்கும் போது விடயம் தெளிவாகும். சாதாரண வர்த்தகர் ஒருவர் ஊடாக இவ்வாறு பெருந்தொகையான பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது.
300 மில்லியன் டொலர்களுக்காக ஒரு டொலருக்கு 240 ரூபாய் வீதம் செலுத்தினால், 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை சம்பாதிக்க முடிந்த ஒரே வர்த்தகம் போதைப் பொருள் வர்த்தகம்.
உண்டியல் வர்த்தகத்தை நடத்திச் செல்ல இடமளிக்க வேண்டும் என்று அந்த அமைச்சர் கூறியதை நான் பார்த்தேன். அவரும் அந்த வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையே இதன் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
இல்லை என்றால், அவர் அந்த வர்த்தகத்திற்கு உதவி செய்பவராக இருக்கலாம் எனவும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
