உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்..! நாடாளுமன்றத்தில் ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
"எய்தவன் இருக்க அம்பை நோவதேன்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும், உண்மையான மூளைக்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் 24 பிரதிவாதிகளில் 15 பேருக்கு 220 வருடங்களுக்கு மேற்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதல்களினால் 260 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர் என்றும், இதன் தாக்கம் இன்றுவரை தொடர்கின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழில் வழங்கும் "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்" என்ற பழமொழியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஒப்பிட்ட ஸ்ரீநேசன் எம்.பி., இந்தத் தாக்குதலுக்கு அம்பாகவும் வில்லாகவும் (செயற்பாட்டாளர்களாகவும் உதவியாளர்களாகவும்) செயற்பட்டவர்களுக்கே தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எய்தவனான பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும், பிரதான தரப்பினருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்போதே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிர சிகிச்சையில் சொகுசு வாழ்க்கை! கடவுச்சொற்களை நாளுக்கு நாள் மறக்கும் சுரேஸ் சலே - சிக்கவுள்ள முக்கிய ஆதாரங்கள்
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்