பலி தீர்த்தது அமெரிக்கா! - முக்கிய தீவிரவாதி விமான தாக்குதலில் கொலை
ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட தீவிரவாதி கொல்லப்பட்டார். எனினும், இது தொடர்பான தாக்குதலில் பொதுமக்களுக்கு உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்த நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். ஐ. எஸ் தீவிரவாத அமைப்பின் ஹரசன் பிரிவினர், நேற்று முன்தினம் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 175 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்ட, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. நங்ஹகர் மாகாணத்தில், ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும் கொல்லபட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மட்டுமே நாசவேலைகளை நடத்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கிளையை சேர்ந்த ஐ.எஸ். கோரசான் தீவிரவாதிகள், பொதுமக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சுமார் 100 தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.