என்னை சர்வதேசம் ஏற்றுக் கொண்டமைக்கான காரணம் என்ன தெரியுமா? அரசுக்கு மைத்திரி வழங்கும் தகவல்
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் ஜனநாயகம் ஸ்திரப்படுத்தப்படும் வரை சர்வதேசம் இலங்கையை கண்டு கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், எந்தவொரு சந்தேகநபர் மீதும், கைதிகள் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் காணப்பட்ட டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வேலைத்திட்டம் அவரால் முன்வைக்கப்பட்டது. எனது ஆட்சி காலத்தில் 19 ஆவது அரசியலமைப் திருத்தம் நிறைவேற்றப்பட்டமையின் காரணமாகவே சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் பரந்தளவில் கிடைக்கப் பெற்றன.
காரணம் 1977 பின்னர் தோற்றம் பெற்ற அரசாங்கங்களில் எனது அரசாங்கம் மாத்திரமே வித்தியாசமானதாகவும் , முற்போக்கானதாகவும் காணப்பட்டது.
எனது அரசாங்கத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. எனினும் நாட்டில் ஊழல் மோசடிக்காரர்களே அதிகம் காணப்பட்டமையால் , எதிர்தரப்பிலுள்ள ஊழல்வாதிகள் ஆளுந்தரப்பு ஊழல்வாதிகளுடன் இணைந்து எனக்கெதிராக சதி செய்தனர். எனது ஆட்சியில் என்னை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று நான் அரசாங்கத்தின் குறைபாடுகளை விமர்சிக்கும் போது ஏன் என்று கேள்வியெழுப்புகின்றனர்.
19 ஐ நிறைவேற்றியதன் காரணமாகவே சர்வதேசம் என்னை ஏற்றுக் கொண்டது. எனது ஆட்சியில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாரிய முயற்சிகளின் பின்னர் எனது முயற்சியில் மதுஷ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது ஆட்சியில் அரசாங்கத்தின் துப்பாக்கிகள் எந்தவொரு சந்தேகநபரையோ அல்லது கைதியையோ நோக்கி இயக்கப்படவில்லை.
ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்தது? கோவிட் தொற்றின் போது அநுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தப்பிச் செல்ல முயற்சித்தாகக் கூறி அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
தப்பிச் சென்றவர்கள் மீது எவ்வாறு சிறைச்சாலைக்குள்ளேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும்? இதனைத் தொடர்ந்து மஹர சிறைச்சாலையில் என்ன நடந்தது என்பதையும் அனைவரும் அறிவர்.
இலங்கைக்கு சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறாமல் உள்ளமைக்கான பிரதான காரணம் இவ்வாறான செயற்பாடுகளே ஆகும். எனவே அனைத்திற்கும் முன்பாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 1978 ஆம் அரசியலமைப்பு 20 சந்தர்ப்பங்களில் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் 12 திருத்தங்கள் அந்தந்த ஆட்சி காலங்களில் காணப்பட்ட ஆட்சியாளர்களால் தமது தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப்பட்டவையாகும்.
18 ஆம் திருத்தம் மன்னனுக்கு காணப்படுவதைப் போன்று ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்குவதாகக் காணப்பட்டது. எனது ஆட்சியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக 18 முழுமையாக நீக்கப்பட்டு 19 நடைமுறைப்படுத்தப்பட்டது.
எவ்வாறிருப்பினும் 19 ஆம் திருத்தத்தில் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கி சில திருத்தங்களுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த செயற்பாடுகளை மேற்கொண்டு நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படுவம் வரை சர்வதேசம் இலங்கையை கண்டு கொள்ளப் போவதில்லை. இவ்வாறான வேலைத்திட்டங்களுடன் சுதந்திர கட்சி புதிய உத்வேகத்துடன் மேலெழும்.
சம்பிராதாய பூர்வமான அரசாங்கத்திற்கு அப்பால், சுதந்திர கட்சியால் புதியதொரு அரசாங்கம் அமைக்கப்படும். இதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
