யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரியம் பேசும் உட்கட்டமைப்புக்களில் இதுவும் ஒன்று
தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயணங்களை இலகுவாக்கும் முறைகளில் ஒன்றாக சுமைதாங்கிகள் இருந்திருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரியம் பேசும் உட்கட்டமைப்புக்களில் ஒன்றாக சுமைதாங்கி கற்களும் அமைந்துள்ளன.
சுமைதாங்கிகளை இன்றும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் காணலாம். சுமைதாங்கிகளை பயன்படுத்திக் கொள்ளாத போதும் அவற்றை பாதுகாத்து வருவதில் யாழ்ப்பாணத்து மக்கள் கூடிய கவனமெடுத்திருக்கின்றனர்.
இன்றைய இளம் தமிழச் சந்ததியினரிடையே சுமைதாங்கிகள் பற்றிய அறிதல் குறைவாக இருப்பது கவலையளித்துவரும் ஒரு நிகழ்வாகும் என தமிழ் பாரம்பரியத்தினை இன்றளவும் உயிர்ப்போடு பேணும் பலரது கவலையாக இருக்கின்றது.
தமிழர்களின் நீடித்த நிலைபேறான வாழ்க்கை முறைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பல உட்கட்டுமானங்கள் நல்ல எடுத்துக்காட்டு என்பது வரலாற்றுத்துறை அறிஞர்களின் கருத்தாக இருப்பதும் நோக்கத்தக்கது.
சுமைதாங்கி கற்கள்
தலைச் சுமைகளை இறக்கி வைத்து பின்னர் மீண்டும் ஏற்றிக்கொள்ள உதவும் கட்டுமானமே சுமை தாங்கி ஆகும்.
சுமையினை தலையில் அல்லது தோளில் சுமந்து செல்பவர்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்ட சுவர் போன்ற கட்டுமானமாக இது இருக்கின்றது.
பொதுவாக 4.5 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்படும்.இரண்டு அடி அகலம் வரை இதன் அகலம் இருக்கும் வண்ணம் அமைப்பதோடு மேற்பகுதி இரண்டு அல்லது மூன்று மட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.
உயரத்தில் வேறுபட்ட மனிதர்கள் அல்லது தலையிச்சுமை மற்றும் தோள்ச்சுமை என்ற வகையில் சுமைகளை இறக்கி வைத்து பின்னர் தூக்கிக் கொள்ள வசதியாக இருக்கும் வகையில் அமைக்கப்படும்.
சுமைதாங்கி கற்களை வலுவானதாக அமைத்திருக்கின்றார்.அவை நிலைநிறுத்தலில் அசைவில்லாத போக்கு இருக்கும். வாகனங்களின் பயன்பாடுகள் மிக குறைவாக இருந்த காலங்களில் அமைக்கப்பட்ட சுமை தாங்கிகள் இன்றளவும் நிலைத்திருக்கின்றன என்பது இதற்கான சான்றாகும்.
வீதியில் களையாறக் கூடிய இடங்கள், திருப்பங்கள், சந்திகள், நீர் பருகும் இடங்கள், சத்திரங்கள், சிறிய கோவில்கள், தூரம் கூடிய பாதைகளில் இடையிடையே என சுமைகளை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டிய இடங்களில் சுமைதாங்கிகள் அமைக்கப்படுவது வழமை என வயோதிபர்களுடன் மேற்கொண்ட சுமைதாங்கிகள் பற்றி கலந்துரையாடலின் போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுமைகளை தூக்கி தலையில் வைத்தபடி தூர இடங்களுக்கு கொண்டு செல்லும் கொண்டு வரும் இயல்பு முன்னர் இருந்திருந்தது.அந்த பயணத்துக்கு உதவியாக மற்றொருவரின் உதவியின்றி சுயமாகவே சுமைகளை இறக்கி வைத்து ஏற்றிக்கொள்ள உதவும் வண்ணம் சுமைதாங்கிகள் பயன்பட்டுவந்தன.
யாழ்ப்பாணத்தில் சுமைதாங்கி
யாழ்ப்பாணத்தில் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் வீதிகளில் சுமைதாங்கிகளின் பயன்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. எனினும் இன்றைய சூழலில் அது தேவையான ஒன்றாக இல்லாது போய்விட்டது என கொடிகாமத்தில் உள்ள வயோதிபர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
சுமைகளை தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் செல்லும்போது சுமைதாங்கிகளை பயன்படுத்திக்கொண்ட தன் அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.
கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் நெல்லியடிக்கு திரும்பும் திருப்பத்தில் ஒரு சுமைதாங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த சுமை தாங்கி போன்று யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சுமைதாங்கிகள் உள்ளன என்பதை யாழ்ப்பாணத்தின் கூகுள் வரைபடம் மூலமும் அறிந்து கொள்ளலாம் முடியும்.
இலங்கையில் சுமைதாங்கிகளை அதிகம் அமைத்து அவற்றை பயன்படுத்திய மக்களாக யாழ்ப்பாணத்து மக்களைக் கருதலாம்.அவற்றை இற்றை வரைக்கும் பேணிக் கொள்ளும் அவர்களின் வரலாற்று நோக்கும் பாராட்டத்தக்கதே.
வாழ்வியல் நோக்கில்
நிலத்தொடர் ஒன்றில் உருவாகும் உட்கட்டுமானத்தின் பயன்பாட்டு நுணுக்கங்களைக் கொண்டு அவ் நிலத்தொடரில் வாழும் அல்லது வாழ்ந்த மக்களின் வாழ்வியல் நோக்கினை அறிந்து கொள்ள முடியும்.
நீண்டகாலமாக ஒரே நிலத்தில் வாழும் மக்கள் அந்த நிலத்தில் உள்ள சூழல் மற்றும் இயற்கை நிகழ்வுகளை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள்.அதற்கேற்றால் போல் தங்களின் உட்கட்டுமானங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருவார்கள் என வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழ்மக்களின் வாழ்வியல் தரைத்தோற்ற இயல்புகளை நன்கு அவதானித்து அதற்கேற்ற நுணுக்கமிக்க உட்கட்டுமானங்களை அமைத்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என சமூக விட ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
நீரை பயன்படுத்தல், பயணப்பாதைகள், சுமைதாங்கிகள், பாடசாலைகள், ஆலயங்கள், இறங்குதுறைகள், கடற்பாதைகள், தொழில் முறைகள் என எல்லா விடயங்களிலும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலிலை அவதானிக்கலாம்.* இந்த வகையில் சுமைதாங்கிகளை பற்றி அறிவதிலும் அவற்றை தொடர்ந்து பேணி வைப்பதிலும் யாழ்ப்பாணத்து மக்களின் சிந்தனை நோக்கு இளையவர்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதும் அவசியமாகின்றது.
தமிழர்களின் பாரம்பரியங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள சுமைதாங்கி கற்களும் ஒன்று என்றால் அது மிகையாகாது.