தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்திய எதிர்ப்புவாதமும் அதன் விளைவும்?
ஈழத்தமிழரசியலில் இந்தியாவும், 13ஆம் திருத்தமும் மீளவும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. ஆனால் அத்தகைய முக்கியத்துவத்தை கருத்தில்கொள்ள வேண்டிய ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் நான்கு பிரிவுகளாக அதனை அணுகுகின்றன.
குறிப்பாக, 13ஐ முழுமையாக அமுல்படுத்துதல் 13ஐ ஓர் ஆரம்ப புள்ளியாக வைத்துக்கொண்டு சமஷ்டி தீர்வினை நோக்கி நகருதல். 13ஐ முற்றாக நிராகரித்தல். 13ஐ ஆரம்ப புள்ளியாய் கூட ஏற்றுக்கொள்ளாது ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று தீர்வை அடைதல் என்ற கோணங்களில் தமிழரசியல் கட்சிகள் குழப்பகரமான முடிவை வெளிப்படுத்தி வருகின்றன.
இத்தகைய குழப்பத்தில் இதுவரை காலமும் அதிகம் ஈடுபடாது இந்தியாவும் 13ம் அவசியம் என்று கருதி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் அதன் பேச்சாளரும் அத்தகைய முடிவை முற்றாகவே நிராகரிக்கும் விதத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இக்கட்டுரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் 13ஐயும், இந்தியாவையும் ஏன் திடீரென நிராகரிக்க ஆரம்பித்துள்ளார் என்பதற்கான பதிலையும், அதன் விளைவையும் தேடுவதாக உள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் டிசம்பர்-11(2021) அன்று வெளியிட்ட கருத்து கவனத்திற்குரியது.
'13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது, 13ஐ அமுல்படுத்த ஒன்று கூடுகிறோம் என்று சில தமிழ் பேசும் கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்முடியாது.
அப்போதைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்த புஷ்டியான தீர்வை தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித்தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தக்கோருகின்றனர்.
13ஆம் திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது, அதனை திருத்த முடியாது என இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகின்றார். 13ஆம் திருத்தத்தின் சில முக்கியமான நல்ல விடயங்கள் உள்ளன. அவற்றையும் சேர்த்துக்கொண்டு அதையும் தாண்டிய அதிகார பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.' என்றார்.
இதன்மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் வெளிப்படுத்தும் செய்தியானது, குழப்பகரமாக அமைவதோடு 13க்கு அப்பால் செல்வது பற்றிய எண்ணத்தையும் கோடிட்டு காட்டுகிறார். அதனை விரிவாக நோக்குதல் அவசியமாகும். முதலாவது, 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆம் திருத்தம் உருவாக்கப்பட்டது.
அதுவே இலங்கையில் நிலைத்திருக்கும் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாகும். கடந்த 35ஆண்டுகளில் அதன் உள்ளடக்கங்கள் அனைத்தும் பலவீனப்பட்டு மத்திய அரசு முழுமையான அதிகாரத்தின் கீழ் மாகாணசபை முறைமையை கைப்பற்றி உள்ளது.
தற்போது 13ஆம் திருத்தம் என்பது வெறுமையான அரசியல் கட்டமைப்புக்கான ஒரு விதிமுறையாகும். அதில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் அத்தகைய விதியை ஓர் அரசியல் உரையாடலுக்கான உத்தியாக மட்டுமே கொள்கின்றனர்.
இந்திய-இலங்கை அரசுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளை விட அதிகமாக 13ஆம் திருத்தத்தை அரசியல் செய்முறைக்கான விதியாக பிரயோகித்து வருகின்றனர்.
ஆனால் ஈழத்தமிழர் அரசியல் தலைமைகள் அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 1987இலிருந்து 2021இன் ஆரம்பகாலப் பகுதி வரை அதிகமாக அலட்டிக்கொள்ளாது 13ஐயும் இந்தியாவையும் அங்கீகரித்து வந்துள்ளனர்.
ஆனால் ஏன் தற்போது குழப்பமடைகிறார்கள் என்பதுவே ஈழத்தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கூறுவது போல் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷா 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வை தருவோம் என்றார்.
ஆனால், அக்காலப்பகுதியில் 11கட்ட பேச்சுவார்த்தைகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அப்போதைய ஜனாதிபதியிடம் உரையாடியது மட்டுமன்றி எத்தகைய தீர்வுக்கான உறுதிப்பாடுமின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது என்பதை பேச்சாளர் மறந்திருந்தாலும் ஈழத்தமிழர்கள் மறக்க முடியாத நிலையிலேயே உள்ளனர்.
மேலும் அதே கட்டமைப்பே மீளவும் உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் கடந்த 70வருடங்கள் இலங்கை ஆட்சியாளர்கள் எத்தகைய தீர்வு முயற்சிக்கு உடன்பட்டுள்ளார்கள் என்பதனையும், அவர்கள் எதிர்காலத்திலும் எப்படி செயற்படுவார்கள் என்பதனையும் கடைக்கோடியில் உள்ள ஈழத்தமிழனால் கூட புரிந்து கொள்ள முடியும்.
அப்படியான நிலையிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் பேச்சாளரும் அதற்கப்பால் சென்று தற்போதைய ஆட்சியளார்களுடன் தீர்வை பெறமுடியுமென நம்புவதென்பது வரலாற்றையும் ஆட்சியாளரின் தந்திரோபாயத்தையும் என்னுமே புரிந்து கொள்ளாதாவர்களிடமிருந்து ஈழத் தமிழர்கள் எதனைப் பெறப்போகிறார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது.
இத்தகைய நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டதன் பிரதிபலிப்பா 13ஐயும் இந்தியாவையும் நிராகரிப்பதற்கான காரணம் என்ற சந்தேகம் நியாயமானது. மூன்றாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும் ஒரு புரிதலோடு 13ஐ ஆரம்ப புள்ளியாக கொண்டு சமஷ்டியை அடைவதென்ற நோக்குடன் ஒரு உரையாடலை நிகழ்த்திவருகின்றது.
அது தமிழ், முஸ்லீம், மலையக கட்சிகளை கைகோர்த்துள்ளது. அதில் வெளிப்படையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை ஈழத்தமிழர்களின் இறுதி இலக்கு சமஷ்டி என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் 13ஐயும் அதனூடாக இந்தியாவையும் ஏன் நிராகரிக்கிறார் என்ற கேள்வி ஈழத் தமிழர் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
எனவே இத்தகைய முன்னுக்கு பின் முரணான குழப்பகரமான அரசியல் தீர்மானங்களால் ஈழத்தமிழரின் அரசியல் இருப்பு காணாமல் போய்க்கொண்டுள்ளது.
பிராந்திய அரசை அதிலும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் உள்ள அரசை அத்துடன் சமகாலத்தில் புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் வலுவான சக்தியாக மாறிவரும் அரசை ஏன் ஈழத்தமிழர்கள் விரேதிக்க வேண்டும்.
நான்காவது, புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் சீனா எதிர்ப்புவாதத்தினால் அமெரிக்க-இந்திய-ஐரோப்பிய தலையீடுகள் இலங்கையில் அதிகரித்து வருகிறது.
அது ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வாய்ப்புக்களை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. அமெரிக்க-இந்திய நலன்களுக்காக ஈழத்தமிழர்கள் முதன்மைப்படுத்தப்படும் சூழலொன்று ஏற்பட்டுள்ளது.
அத்தகைய சூழலை உணர்ந்து கொண்டு தமிழ்த்தரப்பு இந்தியாவிற்கூடாக ஆரோக்கியமான தீர்வொன்றை அடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்தகைய வாய்ப்பை அமெரிக்காவும்,இந்தியாவும் நேரடியாக வழங்காவிட்டாலும் தமது நலனை பூர்த்திசெய்வதற்காக விட்டுக்கொடுக்க வேண்டிய அல்லது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.
அத்தகைய நிர்ப்பந்தத்தை தீர்வாக மாற்றுவது தமிழரசியல் தலைமைகளின் அணுகுமுறையிலேயே தங்கியுள்ளது.
இவ்வகை சூழலில் 13இனை நிராகரிப்பது என்பது, ஈழத்தமிழர் மூலமான இந்தியாவின் இலங்கை தொடாட்பான உறவை நிராகரிப்பதாகவே கொள்ளப்படும். அதனால் அத்தகைய நிர்ப்பந்தமும் இந்திய-ஈழத்தமிழர் உறவும் நெருக்கடியை சந்திக்கும்.
ஐந்தாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்டநிபுணர்குழு அமெரிக்கா விஜயத்தின் பின்னர், இந்தியா தேவையற்றது என்று கருதும் வாதமும், இந்தியாவால் தீர்வு கிடைக்காதென்ற விவாதமும் தமிழ்த்தேசிய பரப்பில் அதிகம் உரையாடப்படுகிறது.
கடந்த 70ஆண்டுகளில் பல சந்தர்ப்பத்தில் இந்தியாவை நிராகரித்த ஈழத்தமிழர்களும் இலங்கை ஆட்சியாளர்களும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டார்கள் என்பது கடந்த கால அனுபவ பதிவாகும். நோர்வே தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவில் தலைமை பேச்சாளரான எரிக் சொல்ஹெய்ம் சமாதான உரையாடல்களின் முடிவுகளை புதுடில்லிக்கு ஒப்படைத்தே தனது நோர்வே பயணத்தை நிறைவு செய்யும் வழமை புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வகை அனுபவங்களையும் கடந்து இந்தியா நிராகரிக்கப்படுகின்றதென்றால் ஈழத்தமிழருக்கான இந்திய-அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்கள் தகர்க்கப்படுவதற்கான நோக்கமே காணப்படுகிறதென சந்தேகம் கொள்வதில் தவறேதும் இருக்க வாய்ப்பில்லை.
ஆறாவது, தமிழ் பேசும் சக்திகள் ஐக்கியமாக பயணிப்பது என்பது இலங்கை ஆட்சியாளர்களுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் ஆபத்தானதாகும்.
அத்தகைய முயற்சியை உடைப்பதன் மூலம் தமது அரசியல் நலன்களை நிறைவேற்ற முடியுமென்ற எண்ணப்பாங்குடன் ஆட்சியார்களும், அதிகார வர்க்கமும் செயற்படுகின்ற போது இத்தகைய நகர்வு ஆட்சியாளர்களுக்கு சேவை செய்வதாகவே அமையும்.
ஈழத் தமிழரது கடந்தகால பகைமைகள் உட்கட்சி மோதல்கள் முரண்பாடுகள் இறுதியில் எதிரிக்கே அதிகம் சேவை செய்துள்ளது. எனவே, தமிழரசியல் தலைமைகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பமானது தெளிவான திட்டமிடலற்ற வரையறைகளையும் கட்சிசார் பகுத்தறிவுவாதத்தின் நிபந்தனைகளையும் பின்பற்றாத அணுகுமுறையின் விளைவாகும்.
கட்சி நலன்களை முன்னிறுத்திக்கொண்டு ஈழத்தமிழர்களின் அரசியலை தமது நலனுக்கு பிரயோகப்படுத்துகின்ற தனிமனிதர்களின் விருப்புரிமையாக ஈழத்தமிழர்களின் அரசியலையும் அதன் தலைமைகளையும் காணமுடிகிறது.
இந்தியாவை மட்டுமன்றி உலகத்தை அணுகுவதற்கான எத்தகைய தந்திரோபாயமுமற்ற செய்முறைக்குள்ளால் ஈழத்தமிழர் அரசியல் நகர்த்தப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறைகள் மீளவும் ஈழத்தமிழருக்கான வாய்ப்பை தகர்ப்பதற்கான சூழலையே ஏற்படுத்தும். மறுபக்கத்தில் ஈழத்தமிழரது அரசியல் தலைமைகளில் மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தேவை ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பிற சக்திகளுக்கும் தேவையானதொன்றாக அமைய வாய்ப்புள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்