பிரித்தானியாவை அச்சுறுத்தும் இந்திய கோவிட் மாறுபாடு! 25 இடங்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு (டெல்டா) வேகமாக பரவும் 25 இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வரைபடம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த 25 இடங்களில் கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு மிகவேகமாக பரவி வருவதாக தொற்றுநோயைக் கண்காணிக்கும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாடு தற்போது பிரித்தானியாவின் புதிய கோவிட் வைரஸ் வழக்குகளில் 91 வீதமாக உள்ளது என்று சுகாதார செயலாளர் மட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இந்திய கோவிட் மாறுபாட்டினால் ஸ்காட்லாந்தில் ஸ்டிர்லிங் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த பகுதியில் மேலும் புதிய வழக்குகள் பதிவாகிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர், ரோச்ச்டேல் மற்றும் போல்டன் ஆகிய பகுதிகளிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா மாறுபாடு ஆல்பா மாறுபாட்டை விட 60 வீதம் வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கென்டில் அடையாளம் காணப்பட்டது.
இங்கிலாந்து பொது சுகாதார (PHE) திணைக்களத்தின் சமீபத்திய தகவல்கள், பிரித்தானியாவில் கோவிட் வழக்கு விகிதங்கள் கிட்டத்தட்ட எல்லா வயதினரிடையேயும் உயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.
இது 20 முதல் 29 வயதுடையவர்களிடையே மிக உயர்ந்த விகிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது சராசரியாக 543 பேரில் ஒருவருக்கு அறிகுறி நோய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 7,393 பேர் பாதிக்கப்பட்டதோடு 7 பேர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 4,542,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 127,867 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 131,856 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 158 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,283,263 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.