17 வருடங்கள் கடந்தும் ஆறா வடுக்களுடன் ஆழிப்பேரலையின் நீளும் சோகக்கதைகள்’’ (VIDEO)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது.
கடலுக்கடியில் உருவான 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு பாய்ந்த அலை சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் உயிரிழந்தனர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இலங்கை நேரப்படி காலை 6.58 அளவில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிற்கு அண்மித்த கடற்பரப்பை ஆழிப்பேரலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
நில அதிர்வு இடம்பெற்ற இடத்தில் இருந்து 1600 கிலோ மீட்டர் தொலைவிலேயே இலங்கையின் அமைவிடம் அமைந்திருந்ததால், உடனடியாக அதன் தாக்கம் உணரப்படாத நிலையில் , காலை 7.28 அளவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை , அம்பாறை , மட்டக்களப்பு உட்பட வடக்கு கிழக்கு கரையோர பிரதேசங்கள் மற்றும் காலி , மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உள்ளிட்ட தென் கரையோர பிரதேசங்களை ஆழிப்பேரலை ஆட்கொண்டது.
மக்கள் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்ட இந்த சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இலட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று 26 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று(26) காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
இதேவேளை, சுனாமி ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.
17 ஆண்டுகள் கடந்தும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன. இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



