ஒமிக்ரோன் தீவிரமடைந்தால் நாட்டில் சுகாதார கட்டமைப்பு சரிவடையும்
ஒமிக்ரோன் பரவல் வீதம் அதிகரித்தால் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் தீவிர நிலையை அடையும் வீதமும் அதிகரிக்கும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
கடந்த வாரத்தில் 202 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 60 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடையதாகும். இவர்களில் பெருமளவானோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களாகவும் உள்ளனர்.
எனவே அனைவரும் தாமதமின்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தற்போது பெருமளவில் ஒமிக்ரோன் பரவலே காணப்படுகின்றமையால் காய்ச்சல் அல்லது ஏதேனுமொரு உடல் நலக்குறைவு காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
நாட்டில் தற்போது வழமையான சூழல் காணப்பட்டாலும் , எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற்றமடையக் கூடும். வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தினால் புதிய பிறழ்வுகள் உருவாகுவதையும் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.