வடக்கு- கிழக்கு ஆளுநர்கள் உட்பட மூவர் மீது ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15.05.2023) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) நியமிக்கப்படவுள்ளனர் .
ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மேற்படி மூன்று ஆளுநர்களும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். மூவருக்கும் எதிராக அந்தந்த மாகாண மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் ஆளுநர் பதவி
மேலும், ஆளுநர்களை பதவி விலகும்படி கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோரினால் தமக்கு எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லையென நேற்று முன்தினம் கூட அறிக்கைகள் வெளியிட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வடமாகாண ஆளுநராக ஜோன் அமரதுங்க தெரிவு செய்யப்படலாம் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் அல்லது முன்னாள் அமைச்சரான தயா கமகே தெரிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகின.
மேலும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் பெயரும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல்: ராகேஷ்