தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்குவது அரசின் பொறுப்பு! - சஜித் அணி தெரிவிப்பு
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை நீக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கின்றது. அனைத்து விடயங்களையும், அரசியல் கோணத்தில் கணிப்பதை அரசு முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நியாயத்தைக் கோரி நிற்பதைப் போன்றே வடக்கு – கிழக்கு மக்களும் நியாயம் கோருகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்குவது அரசின் பொறுப்பாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசு செயல்படுகின்றது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஓர் இனத்துக்கு மாத்திரம் அனைத்து விடயங்களிலும் முன்னுரிமை வழங்கும்போது தேவையற்ற பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் முன்னேறிச் செல்கின்றன.
இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு புரிந்துகொள்ள வேண்டும். பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற முடியும்.
தற்போதைய அரசு பெரும்பான்மை இன மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களைப் புறக்கணித்து, இனவாதத்தைத் தூண்டி அதன்மூலம் தனது இயலாமையை மறைத்துக் கொள்கின்றது. அரசு இனவாதத்தைத் தூண்டி விடுகின்றது என்பதை பெரும்பான்மையின மக்கள் நன்கு அறிவார்கள்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வீண் செலவுகளை ஏற்படுத்துகின்றது. அதனைத் தொடர்ந்து நடத்திச் செல்வது பயனற்றது என்று குறிப்பிட்டு அந்தக் காரியாலயத்தை நீக்க முயற்சிக்கின்றது.
இது முற்றிலும் தவறான நோக்கமாகும். அனைத்துப் பிரச்னைகளுக்கும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தீர்வு காண முடியாது.
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தற்போதைய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.



