யானைகளுக்கு பல கோடிகளை செலவிடும் அரசாங்கம்!
டொலர் நெருக்கடிக்கு மேலதிகமாக ரூபாய் தட்டுப்பாட்டையும் எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வருடாந்தம் இருநூற்றி எண்பது கோடி ரூபாயை செலவிட வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருந்து யானை வெடி கொள்வனவு செய்யப்படுகிறது.
வனஜீவராசிகள் திணைக்கள தகவல்
வருடாந்தம் சுமார் 14 இலட்சம் யானை வெடிகளை கொள்வனவு செய்ய 2,800 மில்லியன் ரூபாயை அரசாங்கம் செலவிடுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
காட்டு யானைகள் கிராமத்திற்கு வரும்போது அப்பகுதி மக்கள் வனஜீவராசி அதிகாரிகளுக்கு அறிவித்தாலும் நாட்டில் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு உரிய நேரத்திற்கு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
தற்போது மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் தற்போதுள்ள தொகையை விட அதிக தொகையை யானை வெடிக்கு செலவிட நேரிடும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்களில் பத்தொன்பது இடங்களில் யானை-மனித மோதல்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
யானை-மனித மோதல்கள்
இலங்கையின் பத்தொன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள 133 பிரதேச செயலகங்களில் யானை-மனித மோதல்கள் தற்போது பதிவாகியுள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைக்கு அமைய யானை-மனித மோதலால் உலகில் அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
இலங்கையில் வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழக்கின்றன.
மேலும், யானை-மனித மோதலால் வருடாந்தம் சராசரியாக 85 மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன.
2020ஆம் ஆண்டில், இலங்கையில் யானை-மனித மோதல்கள் காரணமாக 327 யானைகள் மற்றும் 113 பேர் உயிரிழந்தனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, 2019ஆம் ஆண்டு இலங்கையில் மிகவும் கடுமையான யானை-மனித மோதல்களைக் கொண்ட ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தரவுகளுக்கு அமைய, இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 5,879 என்பதோடு, அவற்றில்
55 யானைகள் முதிர்ந்த தந்தங்களுடன் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.