தொற்றாளர் எண்ணிக்கையை மறைக்கும் அரசாங்கம்!அம்பலப்படுத்திய ஆளும் கட்சி எம்.பி
கடந்த வாரங்களில் கம்பஹா பிரதேசத்தில் நான்காயிரம் தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், மூவாயிரம் பேர் தொடர்பிலான தகவல்களே உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றன.
ஏன் இந்த பொய்யான தகவல்கள் வெளியாகின்றன. யாரை ஏமாற்ற திட்டமிடுகின்றீர்கள்? இது புள்ளவிபரங்களை திட்டமிட்டு மாற்றும் செயற்பாடாகும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய சுதந்திர முண்ணனியின் கொழும்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த 9 நாட்களில் 12 ஆயிரம் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவ்வாறெனின் நாளாந்த தொற்று அந்த மாவட்டத்தில் ஆயிரத்தை கடக்க வேண்டும். அவ்வாறான எந்தவொரு தகவலையும் நாம் காணவில்லை.
கடந்த மாதம் 5ஆம் திகதி நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியிருந்தார்கள் எனினும், இரண்டாயிரத்து 669 என்ற விபரங்களே வெளியானது. கடந்த 11ஆம் திகதிவரை தினமும் ஐயாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியிருந்தார்கள்.
எனினும் மூவாயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்களே அறிக்கையிடப்படுகின்றன. கடந்த 11ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை ஊடாக நான்காயிரத்து 175 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துரித அன்டிஜன் பரிசோதனை ஊடாக ஆயிரத்து 239 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கூட்டுத்தொகை ஐயாயிரத்து 414 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே புள்ளிவிபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. யார் இந்த தவறான தகவல்களைத் தருவது? அவர்களின் நோக்கமென்ன? தொற்றுநோயியல் பிரிவின் இரண்டு நிபுணர்கள், இராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி, இலங்கையில் கொரோனா புள்ளிவிபரங்கள் தொடர்பான தரவுகளை மாற்றியமைக்கின்றனர்.
கொரோனா தடுப்பு செயற்பாடுகளை சீர்குழைப்பதற்கே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதிக்கும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு தவறான தீர்மானங்கள் எடுப்பதற்கான சூழலை உருவாக்குகின்றனர்.