ஓய்வூதியதாரர்களை அரசு மறந்துவிட்டது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் குற்றச்சாட்டு
நமது நாட்டுக்கு அரச சேவை ஊடாகப் பெரும் பணியாற்றிய ஓய்வூதியச் சமூகத்துக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கையிலும் மூச்சாக விளங்கிய அவர்களை ஓய்வுபெற்ற பின்னர் தற்போதைய அரசு மறந்துவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
ஓய்வூதியர் ஒன்றிய அமைப்பினர் இன்று நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்திருந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்
"2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற ஒரு இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்கொள்ளும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் திருத்துவதற்குத் தற்போதைய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

கடந்த சில வருடங்களாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இவர்களின் பிரச்சினைகளை நான் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்தபோதிலும், தற்போதைய அரசுக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமைந்துள்ளது.
பலருக்கு எதிர்க்கட்சியில் இருக்கும்போதே ஓய்வூதியதாரர்களின் ஞாபகம் வருகின்றது. ஆட்சிக்கு வந்ததும் அவர்களை மறந்து விடுகின்றனர்.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது உரத்துப் பேசுவோர், ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் அவர்களைப் புறக்கணிக்கும் அதே நிலைதான் இந்த அரசிலும் தொடர்கின்றது" என குறிப்பிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்ட நிவாரணமானது, பாராபட்சமின்றி இந்த அப்பாவி ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "ஓய்வூதியச் சமூகத்தினரைக் கவனிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் நாட்டில் காணப்படுவதாக அரசின் அமைச்சர்களே ஒப்புக்கொள்கின்றனர்.
திறைசேரியில் பணம் நிரம்பிக் கிடக்கும் நிலையில், இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சும், அதிகாரத்துக்கு வந்ததும் புறக்கணிக்கும் இரட்டை வேடக் கொள்கை ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடையாது.
தற்போதைய அரசு இந்த நிவாரணங்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் அனைத்து முரண்பாடுகளும் முழுமையாகத் தீர்த்து வைக்கப்படும் " என்றும் அவர் உறுதியளித்தார்.






