உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் தேவை அரசுக்கு இல்லை - நளின் பண்டார
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எந்த தேவையும் தற்போதைய அரசாஙகத்திற்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அப்படியான தேவைகள் எதுவும் இல்லாத அரசாங்கம், தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்காது, நழுவி வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பேராயர் நேற்றும் பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனை நாங்கள் இன்று நேற்று கூறவில்லை.
தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என நாங்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளோம்.
அதனை மூடி மறைக்கும் தேவை மாத்திரமே அரசாங்கத்திற்கு இருக்கின்றது. சிறிய நெத்திலி மீன்களை சட்டத்திற்குள் சிக்கவைத்து, தமது இந்த சதித்திட்டத்திற்கு உதவியவர்களை காப்பாற்றும் தேவையே அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
இதன் காரணமாக பேராயருக்கு நேற்றும் அறிக்கை ஒன்றை வெளியிட நேரிட்டுள்ளது. இறுதியில் றிசார்ட் பதியூதீனையே தடுத்து வைத்துள்ளனர்.
பேராயரிடம் இருந்து தப்பிக்க அவர்கள் இதனை செய்துள்ளனர். றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகியுள்ளனர். றிசார்ட் பதியூதீனை காவு கொடுக்க முயற்சித்து வருவதே இதற்கு காரணம்.
அவருக்கு எதிராக நிரூபிக்கக் கூடிய குற்றச்சாட்டுக்கள் இல்லை. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. அவர்களால் கண்டுபிடிக்கவும் முடியாது. அப்படி கண்டுபிடித்தால் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்.
இதன் காரணமாகவே அரசாங்கம் நழுவல் போக்கை கடைப்பிடித்து வருகிறது எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.