பிரான்சில் கோவிட் தொற்றின் நான்காவது அலை! - பொது மக்களுக்கு எச்சரிக்கை
பிரான்சில் கோவிட் தொற்றின் நான்காவது அலை உருவாக்கும் என அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்சில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றின் டெல்டா பிளஸ் திரிபு வேகமாக பரவி வருகிறது. இது நான்காவது அலைக்கு வித்திடும்.
இதன்படி, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நான்காவது அலையின் வீரியம் அதிகமாக இருக்கும் என பேராசிரியர் ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நான்காம் அலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பிரான்சில் கோவிட் பெருந் தொற்றினால், மொத்தமாக 57 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 5,777,965 பேர் வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்சில் இதுவரை மொத்தமாக 111,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 2,664 பேர் பாதிக்கப்பட்டதோடு 29 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 44,098 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 1,162 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 5,622,756 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.