குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான திட்டம்: இறுதி திகதி தொடர்பான அறிவிப்பு
'எவரையும் கைவிடாதீர்கள்' என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு இன்று(12) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தரவு கட்டமைப்பில் உள்வாங்கப்படல்
குறித்த விண்ணப்பங்களுள், 624, 714 விண்ணப்பங்கள் இன்று (12) வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக இத்தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான முன்னோடி திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றதுடன், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
தற்போது நலன்புரித்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது காத்திருப்பு பட்டியலில் உள்ள 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக, 600,000 குடும்பங்கள் கோவிட் இரண்டாம் அலை மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக புதிதாக குறைவருமான நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 06 இலட்சம் குடும்பங்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, இந்த சமூக நலத்திட்டத்திற்கு 3.9 மில்லியன் குடும்பங்கள் விண்ணப்பிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்
39 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் நலன்புரி உதவிகளைப் பெறவுள்ளன.
06 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையின் போதே, இரண்டாம் கட்டப் பணிகளும் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக வீட்டு அலகுகளுக்குச் சென்று தரவுகளை சேகரிக்கவுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள், என்ற அடிப்படையில் ஏற்கனவே நலன்புரி உதவிகள் பெற்று வருபவர்களும் புதிதாக நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோரும் இதில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கை
அதற்காக, பதிவு செய்வதற்கான மாதிரி விண்ணப்ப படிவங்கள் 30.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், 29.09.2022 வரை, தரவுக் கட்டமைப்பில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது.
எனினும் அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரப் பணிகள் காரணமாக 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடும் நலன்புரி நன்மைகள் சபை, விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி ஒக்டோபர் 15 எனவும் நினைவு கூர்ந்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிசம்பர் 15ஆம் திகதி பிரதேச செயலக மட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.