இடிக்கப்பட்ட ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்: நடக்கப்போகும் பெரிய மாற்றங்கள் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழமையான வரலாற்றுப் பெறுமதி கொண்ட ஆலயங்களில் ஒன்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்.
பெரும் ஊற்றின் கரையமர்ந்து சித்திகளை தந்திடும் விநாயகர் ஆலயம் இது.
உள்நாட்டுப் போரின் போது தேர் எரிந்து போன துயரையும் தன்னகத்தே கொண்டது என்பதும் இந்த ஆலயத்தில் நடந்தேறிய வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இப்போது புதுப்பொலிவு நோக்கி நடை போடத் தொடங்கியுள்ளது.
இடிக்கப்பட்ட ஊற்றகரை சித்தி விநாயகர் ஆலயம்
கோவிலின் உள் கட்டுமானங்களை முழுமையாக புதுப்பிக்கும் நோக்குடன் ஆலயம் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆலயத்தின் சுவாமி சிலைகள் ஒன்றாக்கப்பட்டு இராஜகோபுரத்திற்கு அண்மையில் வைக்கப்பட்டு வழமைபோல் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
பக்தர்களின் வழிபாட்டுக்கு எத்தகைய இடையூறுகளும் இல்லாதவாறு ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக அந்த ஆலயத்தில் தொண்டாற்றும் வயோதிபர் குறிப்பிட்டார்.
இராஜ கோபுரமும் அது சார்ந்த கட்டுமானமும் அப்படியே இருக்கும்படி பேணப்பட்டு கருவறை மற்றும் ஆலய மண்டபங்கள் உள்ளிட்ட ஏனைய எல்லா கட்டுமானங்களையும் இடித்தகற்றி விட்டு அதே இடத்தில் அப்படியே பழைய ஆலயத்தை தோற்ற மாற்றம் இல்லாது கட்டப்படுவதாக கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவருடன் பேசும் போது குறிப்பிட்டார்.
ஆயினும் ஆலயம் தரைமட்டத்தில் இருந்து நான்கு அடிக்கும் மேலாக உயர்த்தப்படும் வகையில் புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இடித்தகற்றப்பட்ட பழைய கட்டிடங்களின் இடிபாடுகளை ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் பக்கமாக ஒதுக்கியிருப்பதையும் அது பின்னர் வேறு நிலச் சீரமைப்புக்களுக்கு பயன்படுத்த முடியும் என்றும் ஆலய வழிப்பாட்டுக்காக வந்திருந்த ஊற்றங்கரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தன் சார்ந்த கருத்தினை பதிவுசெய்தார்.
புதிய கட்டுமானப் பணிகள் முடிந்து ஆலயம் எழில்மிகு தோற்றத்தில் காட்சியளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆலய பக்தர்கள் எல்லோரிடமும் இருப்பதனை அவதானிக்க முடிந்தது.
ஜேந்திக் குருக்கலின் அளப்பரிய பணி
நீணடகாலமாக ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் பூசகராக பணியாற்றியவர் ஜேந்திக் குருக்கல்.
அவர் இந்த ஆலயத்திற்காக அளப்பரிய சேவையை செய்துள்ளார். ஆலயத்தின் பூசைகளை ஒழுங்கமைத்து திருவிழாக்களை செய்ததோடு தீர்த்த கேணியை புனரமைப்புச் செய்ததோடு ஆலயத்தின் இராஜகோபுரமும் இவரது முயற்சியால் கிடைத்தது.
தற்போது அவர் உயிருடன் இல்லை.அவரை கௌரவித்தது அவருக்கு சிலைவைக்கப்பட்டது.
அவரது சிலை ஆலயத்தில் வரவேற்பு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளமையை ஆலயத்தின் பரிபாலனசபையில் முன்னர் அங்கம் வகித்திருந்த ஒருவர் எடுத்து விளக்கியிருந்தார்.
தேர் எரிந்த சோகம்
1996 ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து எறியப்பட்டும் ஏறிகணைகனைகள் தண்ணீரூற்று முள்ளியவளை கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கள் மீது பரவலாக விழுந்து வெடிக்கும்.
அப்படி எறியப்பட்ட ஏறிகனையொன்று ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தின் தேர் மீது விழுந்து வெடித்ததில் தேர் பாரிய சேதத்திற்குள்ளானதாகவும் குறிப்பிட்டார் அப்பிரதேச வாசியொருவர்.
ஓயாத அலைகள் தாக்கியழிப்பு படைநடவடிக்கை மூலம் முல்லைத்தீவு படைமுகாம் அழித்தொழிக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட " நந்திக்கடலோரம் முல்லைத்தமிழீழம்" (முல்லைப்போர் இறுவேட்டில் இந்தப் பாடல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.) என்ற பாடலில் " தண்ணீரூற்று பிள்ளையாரின் தேரை எரித்தாயே!." என்ற பாடலடி வருவதை சுட்டிக்காட்டியதோடு அதனை அவர் பாடிக் காட்டியமையும் வியப்பளித்தது.
வரலாற்று நிகழ்வுகளை மனதில் இருத்தி எடுத்தியம்பும் ஆற்றலுள்ளவராக அவரை காண முடிந்தது.
முள்ளியவளை ஆலயங்களின் புனரமைப்புகள்
தண்ணீரூற்று,மாமூலை , பொன்னகர்,நாவல்காடு,புதரிக்குடா, ஊற்றங்கரை,கணுக்கேணி ஆகிய இடங்களை பொதுவாக முள்ளியவளை என்று விழித்தழைக்கும் இயல்பு இப்பகுதி மக்களது பொது இயல்பாக நீண்டு செல்வதனை இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக இருக்கும்.
முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயமும், காட்டா விநாயகர் ஆலயம், ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் ஆகிய விநாயகர் ஆலயங்கள் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டுக்கொண்டிருப்பதனை சுட்டிக்காட்ட வேண்டும்.
குமாரபுரம் முருகன் ஆலயமும் பகுதியளவில் புதிய புனரமைப்புக்குள்ளாகியிருந்தமையும் சுட்ட வேண்டியதொன்றாகும்.
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஔவையாரின் வாக்கு மெருகேறிப்போவதனை இங்கே கண்கூடு காணலாம்.