பங்காளி கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்: ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய முடிவு
யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் யுகதனவி உடன்படிக்கையில் மேற்கொள்ளப்படக் கூடிய திருத்தங்கள் மற்றும் தேவைப்பட்டால் அந்த மாற்றங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அறிக்கையளிக்குமாறு ஜனாதிபதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மாற்றங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின், அவற்றை மேலதிக பேச்சுவார்த்தைகளின் ஊடாக மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் முழு ஒப்பந்தத்தையும் அரசாங்கம் கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கெரவலப்பிட்டியவில் உள்ள 310 மெகாவாட் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கான இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு இடையிலான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவது மட்டுமன்றி அது நாட்டுக்கு நிதி ரீதியாகவும் இலாபகரமானதாக அமையாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தவிர, பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், பல கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்திருப்பது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
யுகதனவி அனல் மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசாங்கத்தின் கூட்டாளி கட்சிகள் ஜனாதிபதியிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam