பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! வெளியான தகவல்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 799 கோவிட் - 19 தொடர்பான மரணங்களும், 10,625 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த வாரம் பதிவான 1,052 கோவிட் - 19 மரணங்கள் மற்றும் 12,364 வழக்குகளில் இருந்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் மொத்தம் 118,195 பேர் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 4,058,468 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
22,31,199 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், தற்போது 17,09,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், மொத்தம் 15,576,107 பேருக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 546,165 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாரந்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கிறிஸ்துமஸுக்குப் பிறகு முதல் முறையாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கோவிட் - 19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் கோவிட் - 19 வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை 10.98 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 24.22 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.